எங்கே மச்சான் நீ போன?
ஏங்க வெச்சி ஏன் போன?
சித்திரைக்கு வந்திடுவேன்னு
சொல்லித்விட்டு போன மச்சான்
பத்து வருஷம் ஆயிடிச்சி
பாத்து பாத்து பூத்திடிச்சி
எங்கே மச்சான் நீ போன?
ஏங்க வெச்சி ஏன் போன?
நீயும் நானும் சேர்ந்து
வாங்கி வந்த கன்னுகுட்டி
பேரன் பேத்தி எடுத்திடிச்சி
பேத்தி கூட சமஞ்சிடிச்சி
எங்கே மச்சான் நீ போன?
ஏங்க வெச்சி ஏன் போன?
பக்கத்துக்கு வீட்டு பரமசிவம்
பல்ல இளிச்சி சிரிக்கிறான்
பக்கத்துல நீ இல்ல
கொல்ல பக்கம் கூவுறான்
எங்கே மச்சான் நீ போன?
ஏங்க வெச்சி ஏன் போன?
நீ பிரிஞ்ச அந்த நாள்
வாங்கி தந்த பட்டு சீல
பெட்டிக்குள்ள பூட்டி வெச்சேன்
கொசுவம் அது கண்டதில்ல
எங்கே மச்சான் நீ போன?
ஏங்க வெச்சி ஏன் போன?
மஞ்சளும் குங்குமமும்
மரிக்கொழுந்து சந்தனமும்
பறிகொடுத்து நிக்கிறேன்
பறிச்சிக்கிட்டு போனியே
எங்கே மச்சான் நீ போன?
ஏங்க வெச்சி ஏன் போன?
ஆண் மூள உச்சியில
பெண் மூள உள்ளத்துல
உச்சி மூள மறந்திடலாம்
நெஞ்சு மூள மறந்திடுமோ
எங்கே மச்சான் நீ போன?
ஏங்க வெச்சி ஏன் போன?
உன் நெஞ்சுக்குள்ள குழி இருக்கா?
குழிக்குள்ள இடமிருக்கா?
கொன்னு என்ன பொதைச்சிக்கிட்டு
போயிருக்க கூடாதா?
எங்கே மச்சான் நீ போன?
ஏங்க வெச்சி ஏன் போன?
வாழ்வோ சாவோ உன்னோடதான்
வாக்கு எல்லாம் கொடுத்தியே
வாழ நீ இல்ல
சாக உன் மடியில்ல
எங்கே மச்சான் நீ போன?
ஏங்க வெச்சி ஏன் போன?