மார்கழி மாத நடுங்கும் அதிகாலை...
ஆழி மழைக்கண்ணா வை மழலையில் பாடிய அந்த நிமிடத்தின் சிலிர்ப்பை..
இலங்கை வானொலி அப்துல் ஹமீதின் காந்தர்வக்குரலில்
நேயர் விருப்பத்தில் என் பெயர் கேட்ட அந்த நிமிடத்தின் பிரமிப்பை...
இராம கிருஷ்ணரையும் இராம லிங்கரையும் அறிமுகம் கண்டு
அசைவம் தவிர்க்க முடிவு செய்த அந்த நிமிடத்தின் தீர்க்கத்தை...
புதிதாய் வெளி வந்த புத்தகங்களை சிறு நூலகத்தில் எதிர்
பார்த்துக்காத்திருந்த அந்த நிமிடத்தின் ஏக்கத்தை...
திடீரென நினைவு வந்த கவிதை வரிகளை
நடு இரவில் விழித்து குறிப்பு எடுத்துக்கொண்ட அந்த நிமிடத்தின் சுவாரஸ்யத்தை ...
முதல் முதலில் வெளி வந்த கதைக்காக
25 ரூபாய் மணி ஆர்டர் வாங்கிய அந்த நிமிடத்தின் தன்னம்பிக்கையை...
வீட்டு முற்றத்தில் ஆனந்தமாய் மழையில் நனைந்த
அந்த நிமிடத்தின் சுதந்திரத்தை...
நீ தான் பொறுப்பு என்று பாட்டி சொன்ன ரோஜா செடி
முதல் மொட்டு விட்ட அந்த நிமிடத்தின் பரவசத்தை...
என் சிநேகிதியிடம் மன வருத்தம் ஏற்பட்ட போது
மனம் குழம்பி அதை சரி செய்ய போராடிய அந்த நிமிடத்தின் பர பரப்பை...
மனம் சோர்ந்து வாடுகையில் எதிர் பாராமல்
ஒலித்த இளையராஜா பாடலின் சுகத்தை...
அலை பெரிதாக வந்தால் என்ன செய்வதென்று திட்டம் தீட்டிக்கொண்டிருக்கையில்
திடீரென வந்து முழுவதும் நனைத்த அந்த நிமிடத்தின் அலறலை...
மாவட்ட அளவில் மதிப்பெண் பெற எதிர் பார்க்கிறோம்
என்று சொன்ன அந்த நிமிடத்தின் பயம் கலந்த பொறுப்புணர்ச்சியை...
முதல் முதலில் என் பிள்ளையின் குரல் கேட்டு ஸ்பரிசித்த
அந்த நிமிடத்தின் பேரானந்தத்தை...
எந்த கேமரா வும் பதிவு செய்ய முடியாத ஆழ் மனதின் இந்த உணர்வுகளை...
மீண்டும் வாழ்ந்து பார்க்கிறேன்...
டைரி குறிப்புகளில் தேக்கி வைத்த என் வார்த்தைகளின் ஊடாக...
எந்திர மயமான வாழ்க்கையில் என்னை
உயிர்ப்புடன் வைத்திருக்கும் அந்த நினைவுகள்...
மீண்டும் கிடைக்குமா அந்த நிமிடங்கள் !!!
ஏக்கத்தில் ஒரு சொட்டு கண்ணீர்...
அதையும் பதிவு செய்கிறேன்...
நிரப்பப்படாமல் இருக்கும் என் 2013 டைரியில்...!