நடந்து கொண்டிருந்தோம்..
ஊர் அடங்க தொடங்கி இருந்தது..
இரவு மெல்ல விழிக்க
பௌர்ணமி நிலவு துரத்த
நடந்து கொண்டிருந்தோம்..
சலசலத்த பேச்சு வாக்கியங்களாகி
வார்த்தைகளாகக் குறைய
நடந்து கொண்டிருந்தோம்
சாலை முட்ட சென்ற வாகனங்கள்
அருகி ஓன்றிரண்டாய்
சிவப்பு விளக்கும் மறுத்து செல்ல
நடந்து கொண்டிருந்தோம்
கடைசி பேருந்தும் கடந்து சென்றது
நாள் முழுக்க பாதங்களை சுமந்து
ஓய்ந்த ரயில் நிலைய படிக்கட்டுகள்
கொஞ்ச நேரம் எங்கள்
முதுகுகளையும் சுமந்தன..
நடந்து கொண்டிருந்தோம்
பதினேழு பதிமூண்றாகி
பதினோண்றானது
எங்கள் எண்ணிக்கை..
எங்களைத் துரத்திய நிலவும்
கண்ணாம் பூச்சி ஆட்டம் துவங்கியது
கும்மிருட்டில் கடந்து சென்றன
மூன்று பூங்காகளும்
ஒரு ஹைதராபாத் சாலையும்..
அடைந்தோம் மலையுச்சி பூங்காவை
உணர்ந்தோம்
துயில் மறுத்தது நாங்கள் மட்டுமல்ல
வேறு பல ஜோடிகளும் என்று..
காதலை வாழ்த்திவிட்டு
நடந்து கொண்டிருந்தோம்
இன்னூமொரு மலை முகட்டுப் பூங்கா
நடுநிசி
எங்களையும் எங்களையும் தவிர
வேறு எந்த சலனமும் இல்லை
அந்த நேரத்தில் அந்த இடத்தில்
உடற் பயிற்சி செய்யும்
வயோதிக தம்பதிகள்
சிலிர்த்து போன நாங்கள்
அவர்களூக்கு கால்கள் இருப்பதை
உறுதி செய்துவிட்டு
நடந்து கொண்டிருந்தோம்
மலை இறங்கினோம்
எண்வரானோம்
துறைமுகத்தின் வால் பிடித்து
நடந்து கொண்டிருந்தோம்
பழைய மலேயன் ரயில் நிலையம்
கம்பீரமாய் கடந்து சென்றது
சோர்வு கவ்வ துவங்கியது
தேநீர் தேடல் ஆரம்பம்.
கண்டோம் கழுவி கவிழ்க்க பட்ட
மெக்டனல்டை..
அந்த நேரத்திலும் கும்பலாய்
இளையர் கூட்டம்.
சுடுபான தெம்பில்
நடந்து கொண்டிருந்தோம்
முதல் பேருந்தும்
காவலர் ரோந்து காரும் கடந்து
சென்றன
லேசாய் தென்றல் வீசியது
நடந்து கொண்டிருந்தோம்
கரையோர பூங்காவும் வந்தது
காலைக் கடன் கழித்தோம்
வேகம் குறைய
நடந்து கொண்டிருந்தோம்
மெல்ல விடியலும் எட்டிப் பார்த்தது
அதிகாலை புகைப்பட வகுப்புகளுக்காக வரத்துவங்கினர்
ஓட்ட நடை பயிற்சியரும் வந்தனர்
சில காலை வணக்கங்களும்
பல புன்முறுவல்களும்
மெரினா நீர் தேக்கதை தாண்டி
நடந்து கொண்டிருந்தோம்

No comments:
Post a Comment