Thursday, October 24, 2013

சருகுகள் - படித்ததில் பிடித்தது

மாடியை ஒட்டிய புத்தக அறையினுள்
எப்படியோ சேர்ந்துவிடுகின்றன சருகுகள்…
வாசிப்பினிடை தலைதூக்கினேன்
செல்லமாய் சிணுங்கி
ஒன்றையொன்று துரத்திச் சரசரத்தன
கட்டிலுக்கடியில் பதுங்கின மேலும் சில
பெருக்க மனதின்றி விட்டுவைக்கிறேன்
ஈரமனைத்தும் உறிஞ்ச
வெயில் வெறிகொண்ட இக்கொடுங்கோடையில்
எந்த வடிவிலேனும்
இந்த மாநகர வீட்டினுள் இருந்துவிட்டுப்போகட்டுமே
மரம்.

Thursday, September 5, 2013

ஒரு சாதாரண நாள்

இந்த நாளும் விடிய துவங்கிய்து
ஒரு சாதாரண நாளூக்கான 
எல்லாவிதமான அறிகுறிகளூடன்

சாலைகளில் வாகனங்களின்
உணர்ச்சியற்ற மெளன ஊர்வலம்...

பேரூந்து நிறுத்தத்தில்  காத்திருக்கும்
கேள்விக்குறிகள் படர்ந்த
அதே சோக முகங்கள்..

இன்னும் சோம்பல் முறிக்கும் 
சாலையோர மைனா...

இந்த நாளும் விடிய துவங்கிய்து
ஒரு சாதாரண நாளூக்கான 
எல்லாவிதமான அறிகுறிகளூடன்

போகப் போகத்தான் தெரியும்..

Saturday, August 3, 2013

இன்னுமொரு மழைக்காலை - எதிர்மறை

இந்த நாள் கொண்டு வரப்போகும் கோரங்களின்
மெல்லிய திரைச்சீலை

ஏதோ சூழ்ச்சி நடக்கப்போகும்
நாடக மேடையின் 
மாயான அமைதி

புன்னகை மறி(று)த்த முகங்கள் போல்
கறுத்து இருண்ட மேகங்களின்
அணிவகுப்பு

மழையின் அழகு 
பார்ப்பவர் மனதில்..

Saturday, June 22, 2013

தமிழ் இளைஞப் பொறியியலாளர்கள், அரூபக் கருத்துநிலை வாத்துக்கள் - http://othisaivu.wordpress.com/

நான் மின்னியல் / கணினியியல் சார் தொழில் நுட்ப நேர்காணல்களில் ஈடுபட்டு, கிட்டத்தட்ட 12 வருடங்களாகி விட்டன. வாழ்க்கை மிக மகிழ்ச்சியுடன் தான் போய்க் கொண்டிருந்தது சில நாள் முன்பு வரையிலும் கூட. ஆனால் துரதிருஷ்டவசமாக வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

ஏனென்று கேட்கிறீர்களா? ஹ்ம்ம்ம்.

… நான் ஒரளவு மதிக்கும் இளைஞர் ஒருவர் (ஒரு காலத்தில் என் குழுவில் இருந்தவர் – மன்னிக்கவும்,இவர் ஜாதி எனக்குத் தெரியாது) மின்னியல் / கணினியியல் சார் தொழில் நுட்ப முனைவுகளில் ஈடுபடுவதில் ஆர்வமோடிருப்பவர். ரொபாடிக்ஸ் தொடர்பான ஒரு புது தொழில்முனைவுக்காக, அதற்கான மூல ஆராய்ச்சிக்காக, நிபுணத்துவம் நிறைந்த ஒரு சிறிய இளம் குழுவை (SWAT team) அமைக்கக் கடந்த சில மாதங்களாக முயன்று கொண்டிருக்கிறார். சில மாதங்கள் கல்லூரி கல்லூரியாகச் சென்று கொண்டிருந்தார். பல மாணவர்களுடன் பேசியிருக்கிறார். அவரால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. கடைசியாக அயர்ச்சியுடன், தனக்குக் கிடைத்த ஆயிரக் கணக்கான (இவர் உண்மையாகவே சுமார் 2300 போல கிடைத்தது என்று சொன்னார்!)  விண்ணப்பங்களில், சுமார் நாற்பத்திச் சொச்சம் தொழில்நுட்பத் தமிழிளைஞர்களின் தற்குறிப்புகளுடன் (resumes!) எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி, குழுவினரைத் தேர்வு செய்வதற்குக் கொஞ்சம் உதவ முடியுமா என்று கேட்டார். மேலும் அவருடைய ‘ஐடியா’வை எப்படி ‘பேக்கேஜ்’ செய்து ஒரு வருமானமாதிரியை உருவாக்கலாம் என்பதற்கும் என் கருத்துக்களைக் கேட்டார். பல நாட்கள் தொடர்ந்து தொலைபேசியில் ஒரே அன்புத்தொல்லை வேறு.

நான் வழக்கமாக மழுப்பி விட்டு, இம்மாதிரிக் கெரில்லாத் தாக்குதல்களை திசை திருப்பி விடுவது வழக்கம். முயற்சியும் செய்தேன் — எனக்குப் பிடித்த விஷயங்கள் செய்வதற்கே நேரமில்லை. அப்படி நேரம் கிடைத்தால், என் சொந்தக் குழந்தைகளுடன் செலவழிக்கத்தான் விரும்புவேன். இந்த ஒத்திசைவு பூதம் வேறு. நீங்கள் தயவுசெய்து வேறு நபர்களிடம் போகக் கூடாதா? எனக்கும் தொழில் நுட்பத்துக்கும் வெகுதூரமாகி விட்டது – நான் ஒரு பழைய பஞ்சாங்கம், நீங்கள் சமைக்கப் போகும் புதியதோர் உலகத்திற்கு நான் எப்படி உதவ முடியும். எனக்கு, நாம் பார்க்கும் மிகப்பல இளைஞர்கள் பேரில் மரியாதையோ நம்பிக்கையோ இல்லை – ஆக, எனக்கு இதில் நேரம் செலவழிக்க அவ்வளவு விருப்பமில்லை – ஆனால் என் நல்வாழ்த்துக்கள். என்னை விட்டுவிடப்பா.

அவர் மறுபடியும் மறுபடியும் தொந்திரவு செய்து கொண்டேயிருந்தார். உங்கள் கை ராசியான கை (!) என்றெல்லாம் சொன்னார் – அவருக்கு மெய்யாலுமே மிகையான நகைச்சுவை உணர்ச்சிதான்.

அவரிடம் சொன்னேன் – நீங்கள் கொடுக்கப் போகும் சம்பளத்தில் அரைவாசியோ கால்வாசியோ கொடுத்தால் கூடப் போதும், அற்புதமான  ரஷ்யப் பொறியியலாளர்கள் கிடைப்பார்களே அவர்கள் நேரத்தை வீணடிக்காமல் காரியத்தைக் குறித்த நேரத்தில் தரமாகச் செய்து கொடுப்பார்கள். ஒரு காலத்தில் அவர்களால் ஆங்கில ஆவணங்களைச் சரியாக எழுத முடியாமலிருந்தது. தற்போது அந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்கள் இதனைச் செய்யலாகாதா? பழைய நட்பை இப்படியா வெட்கமில்லாமல் உபயோகித்து அரைக் கிழவனான என்னை இப்படிப் படுத்தி எடுப்பீர்கள்?? எனக்கு வேறு வேலையே இல்லை என நினைத்த்தீர்களா?

அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இவ்வளவு பெரிய தமிழ்நாட்டில், நூற்றுக் கணக்கான உயர்கல்வி நிறுவனங்கள் இருக்கும் நாட்டில்  ஒரு சிறு குழுவைக் கூடவா நம்மால் தயார் செய்யமுடியாது? இந்த நிலைமையை வெட்கமில்லாமல் நீங்களுமா பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? வருடாவருடம் ஒரு லட்சத்துக்கு மேல் வெளி வந்து கொண்டிருக்கும் பொறியியலாளர்களில் இரண்டு பேர் கூடவா தேற மாட்டார்கள்?

நான் சொன்னேன்: தம்பி, நான் வெட்கமில்லாதவன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், தமிழ் இளைஞர்கள் அனைவரும் உதவாக்கரைகள் எனச் சொல்லவில்லை. அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் அப்படிப்பட்டவர்கள் தான் என மட்டுமே நினைக்கிறேன். மேலும் அந்தச் சிறுபான்மையினரைக் கண்டுபிடித்து அவர்களை வளர்த்தெடுப்பது என்பது வைக்கோல்போரில் ஒருவைரஸ்ஸைத் தேடுவது போன்ற அயர்வான செயலாகும் என்றும்தான் நினைக்கிறேன். எனக்கு இந்தத் தேடலில் பிடித்தமில்லை. இந்தக் கேடுகெட்ட நிலைமைக்கு நாமெல்லாரும் காரணம்தான். ஒப்புக் கொள்கிறேன். நான் நிறைய பார்த்து விட்டுத்தான் சிறுவர்களோடு மட்டுமே சகவாசம் வைத்துக் கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை குழந்தைப் பருவத்திலிருந்தே நம் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களை வளர்த்தெடுக்க வேண்டும். அவ்வளவுதான். என்னால் எனக்கு முன்னறிமுகம் இல்லாத உயிரில்லாத சப்பை இளைஞர்களோடு, ஊக்கம் கொடுத்து, கெஞ்சி, கூத்தாடியெல்லாம் வேலை செய்ய முடியாது – நேர்காணல்களெல்லாம் முடியவே முடியாது – அதற்குத் தேவையான தடிமன் தோலும் பொறுமையும் சக்தியும் எனக்கில்லை. மன்னிக்கவும். என்னால் முடிந்ததைத் தான் நான் செய்யமுடியும்.  நான் செய்யவேண்டும் என நீங்கள் விரும்புவதை நீங்களே ஏன் செய்யக் கூடாது? உங்கள் குழு கூட்டப்பட்டு உங்கள் ரொபாட் வெளிவர என் வாழ்த்துக்கள்.

அவர் விடவில்லை – நீங்கள் மாறி விட்டீர்கள். நீங்கள் தமிழகத்தின் முன்னேற்றத்தில் நம்பிக்கையற்றவர் – ஒரு ஸினிக், அவநம்பிக்கைவாதி. ஒருவர் தமிழ் நாட்டுக்கு உதவி செய்ய வந்தாலும் அதற்கு ஒரு உதவியும் செய்ய மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்களே.

- தம்பி, நான் சில விஷயங்களில் அவநம்பிக்கைவாதி ஆனால் பல விஷயங்களின் நம்பிக்கைவாதி. என்னால் முடிந்ததை, எனக்குப் பிடித்ததை நான் தமிழ் நாட்டில் செய்து கொண்டிருக்கிறேன். உங்களுக்குப் பிடித்ததை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்கு உதவி செய்யவேண்டுமென்று எதிர்பார்ப்பது நியாயமா? நான் உங்களை என்  இடத்துக்கு வந்து வேலை செய் என்று அடம் பிடிக்கிறேனா? நான் மட்டுமா உங்களுக்கு அறிமுகம்? வேறு கிறுக்கனே கிடைக்கவில்லையா? உங்களோட டெல்லியிலேயே ரொபாடிக்ஸ், தொழில் முனைவுகள் பற்றித் தெரிந்தவர்கள் ஒருவர் கூடவா இல்லை? இப்படி வளர்த்த கடா மார்பில் பாய்ந்தால், நான் என்னதான் செய்ய முடியும்? நீங்கள் தமிழகத்துக்கு பாடுபட்டு உதவியெல்லாம் செய்ய வந்திருப்பதாக நான் நினைக்கவில்லை. தேவையில்லாத பிம்பங்கள் வேண்டாமே! சுயநலம் என்பது கெட்டவார்த்தையில்லை. சரிதானா?

… சார், நான் தமிழிளைஞர்களுக்கு முன்னுரிமைகொடுக்கலாம் என்று முயற்சி செய்கிறேன். நீங்கள் அதற்கு முட்டுக் கட்டை போடுகிறீர்களே!

… தம்பீ, நான் உங்களை வேலையோ முன்னுரிமையோ கொடுக்கவேண்டாமென்றா சொன்னேன்? என்னால் உதவ முடியாதென்றுதானே சொன்னேன் – அதுவும் நீங்கள் கேட்டதால்தானே சொன்னேன். முதலில் நீங்கள் – உங்களுடைய அறிவுரையை நான் கேட்டுக் கொள்ளவேண்டுமா அல்லது உங்களுக்கு என் உதவி வேண்டுமா என்பதைப் புரிந்து கொள்ளுங்கள், மேலே அவசியமில்லாமல் பேசி உங்கள் நேரத்தையும் வீணடிக்கவேண்டாம். இரண்டாவதாக – உங்களுக்குக் குறிக்கோள்களை அடைவது முக்கியமா அல்லது உணர்ச்சிகரமாக தமிழ் கிமிழ் என்று வெட்டி உதவாக்கரைப் பேச்சுப் பேச வேண்டுமா என்பதையும் முடிவு செய்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரியாதா – வெட்டிப்பேச்சினால் தமிழுக்கும் உபயோகமில்லை, உங்கள் வேலைக்கும் உபயோகமில்லை என்பது?? நீங்கள் ஏதாவது திராவிடக் கட்சியில் ஐக்கியமாகி விட்டீர்களா என்ன?

… சார், நான் சொன்னதைத் தப்பா புரிஞ்சுகிட்டீங்க. ஒரு வேகத்துல ஏதோ  பேசிட்டேன்னு நினைக்கிறேன். இதெயெல்லாம் விடுங்க – நம் ஒருகால நட்பினை நினைத்தாவது எனக்கு நீங்க உதவ முடியுமா?

… முடியாது, மன்னிக்கவும்.

.. சரி உங்கள் இஷ்டம். ஆனால் என் வெஞ்சர் ஐடியா நன்றாக இருக்கிறது என்கிறீர்கள் – உங்களுக்கு விஸிகாரர்கள் கிட்ட பழக்கம் எல்லாம் இருக்கிறது. அந்த பார்வையிலே பார்த்தால் கூட, என் முனைவு ஆதரிக்கத் தக்கதுதானே? நான் என்னதான் செய்யவேண்டும் என்று சொல்கிறீர்கள்?

… தம்பீ, நீங்கள் ஏன் எஞ்சினீயரிங் காலேஜ் கஞ்சினீயரிங் காலேஜ் என்று அலைகிறீர்கள்? எஞ்சினீயரிங் காலேஜில் படித்து காகிதப்பட்டம் வாங்கியவன் எல்லாம் எஞ்சினீயரா? ஏன் இந்த அரைகுறைக் குஞ்சாமணிகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? என் அனுபவம் படி 4-5% நிஜமான எஞ்சினீயர்கள் எப்படியாவது முட்டி மோதிக்கொண்டு வந்தால்தான் உண்டு. இந்த மைனாரிட்டி பசங்களை நீங்கள் பிடிக்கவேண்டும் – ஆனால் அது கடினம்; அதற்காக, கண்ட கழுதைகளை எஞ்சினீயர்கள் என்று பாவித்து எப்படி அவர்களுடைய ரெஸ்யூமேக்களை வாங்கினீர்கள்? நீங்கள் படித்த வேலூர் காலேஜ் நிலைமையே எப்படி இருந்தது? அப்போதே பரிதாபகரமாக இருந்தது.  இப்போது எப்படி இருக்கிறது? நீங்களே விசனப் பட்டீர்கள். நீங்கள் ஏன் ஒரு டிப்ளமா மட்டும் படித்த அல்லது +2 படித்த – கற்றுக் கொண்டு வேலைகளைச் செவ்வனே செய்யும் முனைப்புள்ள இளைஞர்களைத் தேர்வு செய்யக் கூடாது? நான் உங்களுக்கு சில இளைஞர்களைப் பரிந்துரை செய்ய முடியும்.

…சார், அவங்களுக்கு ஆங்கிலம் சரியாக வராது.

தம்பீ, உங்களோட எஞ்சினீயர்கள் எல்லாரும் ஷேக்ஸ்பியர் வம்சமா? என்னய்யா சொல்ல வருகிறீர்? ஜப்பான்காரன் ரஷ்யாக்காரனுக்கெல்லாம் ரொம்ப ஆங்கிலம் தெரிந்துதான் தொழில்முனைவுகளில் சிறந்து விளங்குகிறார்களோ? இவ்வளவு தமிழ் மேல் கரிசனம் இருந்தால் ஏன் நீங்கள் அந்த உண்மையான எஞ்சினீயர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தரக்கூடாது? உங்களுக்கு உங்கள் காரியம் ஆக வேண்டும். அவ்வளவுதானே! காரியம் கைகூட வேப்பிலை வேண்டுமானால் வேப்பிலை அடிப்பீர்கள், மேப்பிள் இலை வேண்டுமானால் அதை… தம்பீ, உங்கள் கண்ணோட்டம், பார்வை எனக்கு பிடிக்கவேயில்லை. உண்மையில் அருவருப்பாகவே இருக்கிறது.

அய்யோ சார், அவர்களுக்கு தன்னம்பிக்கையும் குறைவாகத்தான் இருக்கும்.

சரி. நீங்கள் போய், சகிக்க முடியாத தன்னம்பிக்கையுடன் நுனி நாக்கில் அரைகுறைக் குப்பை ஆங்கிலம் பேத்தும் அந்தத் திறமையற்ற, முனைப்பற்ற இளைஞர்களைச் சேர்த்திக் கொண்டு என்ன எழவு வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். என்னை விட்டுவிடுங்கள்.


…சார், குழந்தைகளெல்லாம் எப்படி இருக்காங்க? பலவருடம் முன் பார்த்தது…

.. தம்பீ – சமரசத்துக்கு வருகிறீர்கள் என்பது புரிகிறது. ஆனால் அனாவசியமாகப் பொய் சொல்லவேண்டாம்; அவர்களை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது.

– சார் மன்னிச்சிடுங்க. கோவமா இருக்கீங்க போல, பிறகு பேசுகிறேன்.

=0=0=0=0=0=0=

ஆனால் அந்தத் தம்பி, ஒரு எழவெடுத்த, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமர் – தொடர்ந்து கழுத்தை அறுத்து, என்னை வேதாளமாக்கி நேர்காணல் முருங்கை மரத்தில் ஏறவே வைத்து விட்டார். (ஹ்ம்ம் – அவர் சுலபத்தில் மனம் தளருபவராக இருந்திருந்தால், முதலில் என் குழுவில் சேர்த்தியே இருக்க மாட்டேன்; எல்லாம் என்கஷ்டகாலம் தான்.)

சூழ்நிலை / செயல்முறை: நாற்பத்திச் சொச்சம் தொழில்நுட்பத் தமிழிளைஞர்களின் தற்குறிப்புகள் – அதில் சுமார் முப்பது புதுப்பட்டதாரிகள் – நைஸாக இன்னொரு முப்பது தற்குறிப்புக்களையும் என்னிடம் தள்ளினார் அந்த இளைஞர் – மொத்தம் எழுபத்திச் சொச்சம் ஆவணங்கள் – அதில் இரண்டு பக்கங்க்ளுக்கு மேற்பட்டு வளாவளாவென்று ‘நான் இதைச் செய்தேன்,’ ‘நான் அதைச் செய்தேன்!’ என்று பார்த்தவுடனே பொய் என்று தெரியும் பிழைகளும் பொய்மையும் நிரம்பிய விண்ணப்பங்களை ஒதுக்கினேன் – மிச்சம் 20 போல இருந்தவற்றை இரண்டுமூன்று முறை படித்தேன். தேவையற்ற பொதுவாகச் சொதப்பப்பட்ட ‘Reading Books, Listening Musics,  Watching films, I want to design an Intelligent Robot, Designing AI Robot, Conducting Cultural Fest’ தத்துப்பித்து வகையறாக்கள் 5 ஒதுக்கல் – பின்னர் ஒரு இழவு கணினியியல் / மின்னியல் பற்றியும் தவறில்லாமல்  எழுதுவதை விட்டுவிட்டு , ஹேக்கர்<பெயர்>, க்யூட்டி<பெயர்> (அதாவது HackerSubbu, CutieMani, IAmTheBoss at somemail,com) போன்ற முதிராத்தன்மையுடைய மின்னஞ்சல் முகவரிகள் காரணமாக மேலும் 4 ஒதுக்கல் – மிஞ்சிய 11 பேருக்கு அந்த இளைஞத் தொழில்முனைவோன்  மூலமாக  மூன்று புதிர்கள் அனுப்பினேன் (இணையத்தில் மேய்ந்து, அவற்றின் விடைகளைக் கண்டுபிடித்துக் காப்பியடிக்கக்க முடியாதவை அவை, நானே தயாரித்து அனுப்பியவை – ஆனால் மிகச் சிக்கலானவை அல்ல)  – விடைகளை அனுப்புவதற்கு இரண்டு நாள் சமயம் அந்தப் பிள்ளைகளுக்கு – இதில் ஐந்து பேர்கள் மட்டும் ஒரு  புதிருக்கு அரைகுறை விடை அளித்திருந்தார்கள் – அதில் இருவருடையது வார்த்தைக்கு வார்த்தை அச்சாக ஒரே மாதிரியாக (அதே இலக்கணப் பிழைகள் கூட) இருந்ததால் கடைசியில் ஒருவழியாக, தேறியது – அதாவது ‘தேற்றியது’ மூவர் மட்டுமே! நான் சொன்னேன் – இவர்கள் மேல் நம் நேரத்தை வீணடிக்க வேண்டாம், அவர்களுக்கும் பாவம் அழுத்தம் கொடுக்கவேண்டாம், விட்டுவிடுவோம் என்றேன் – ஆனால் நண்பருக்கு நப்பாசை, இந்த மூவரை எப்படியாவது எடுத்துக் கொண்டால், மந்திரஜாலமாக அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து விடும் என்ற எண்ணம்.

விதிகள்: நான் நேர்காணல் செய்ய வீட்டை விட்டு நகர மாட்டேன், தொலைபேசியில் தான் பேசுவேன் – தொலைபேசிக் கட்டணம் கொடுத்து விட வேண்டும் – ஒவ்வொரு தொலைபேசிப் பேச்சுவார்த்தை / நேர்காணல் ஒரு மணி நேரத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும் – எனக்கு ஒரு பேச்சுவார்த்தைக்கு ரூபாய் ஐயாயிரம் – முன்னமேயே அறிவிக்கப் பட்ட, குறித்த நேரத்தில் அந்தப்பக்க இளைஞர் இல்லையானால் அந்த நேர்காணல் நடந்ததாகக் கருதப் படவேண்டும் – நான் இன்னொரு சந்தர்ப்பம் கொடுக்கமாட்டேன் – தமிழில் அல்லது ஆங்கிலத்தில் நேர்காணல், இரண்டு மொழிகளிலும் கலந்தடித்து இல்லை – கேள்விகள் அவர்கள் தங்கள் குறிப்புகளில் எழுதியது பற்றி மட்டுமே கேட்கப் படும் – பொது அறிவு கிது அறிவு என்றெல்லாம் கேட்க மாட்டேன், அவர்களுக்கு இதற்கெல்லாம் கிலோ என்னவிலை என்று தெரியாது என்பது எனக்குத் தெரியும் – மொத்தம் 55 நிமிடங்களுக்கு நேர்காணல் – ‘Tell us something about yourself’ என்கிற பத்து நிமிட பஜனையெல்லாம் இருக்காது. ‘Do you have any questions’ என்றெல்லாம் கேட்கமாட்டேன் – வேண்டுமானால் அவர்களே கேட்டுக் கொள்ளட்டும் – நேர்காணல்கள் பதிவு செய்யப்பட்டு அவற்றின் ஒரு மணினேர ஆடியோ ஆவணங்களை நான் அந்த விண்ணப்பதாரர்களுக்கு அளிப்பேன் – அதில் ஐந்து நிமிடங்களுக்கு என் பேச்சு, நேர்காணல் பற்றிய கணிப்பு  / மதிப்பிடல்  இருக்கும் – தேர்வு செய்யப் பட்டார்களோ இல்லையோ, அவர்களுக்கு என்ன, ஏன், எப்படி ஆயிற்று எனத் தெரியவேண்டும், அதிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும் – என்னுடைய முடிவுதான் கடைசி: நான் தேர்வு செய்தால்தான் தேர்வு பணி உத்தரவு எல்லாம்.

இளைஞத் தொழில்முனைவர் இவற்றுக்கு ஒப்புக்கொண்டார்.

இந்த மூன்று எழவெடுத்த ‘தொலைபேசிவழி நேர்காணல்களுக்கும் சில விஷயங்கள் பொதுவாக இருந்தன.

1. கேள்வி கேட்டவுடன் – பரக் பரக் பரக் என்று பக்கம் திருப்பும் சத்தம் கேட்கும், கூட யாராவது குசுகுசுவென்று பேசுவது கேட்கும், கீபோர்ட் சத்தங்கள் கேட்கும்… பின்னர் அரைகுறையாக ஏனோதானோவென்று பதில் – பெரும்பாலும் இணையத்திலிருந்து படிப்பார்கள். (ஒரு நேர்காணல்போது சம்பந்தப் பட்ட விக்கிபீடியா பக்கத்திலிருந்து படித்தார் ஒரு இளைஞர்!)

2. எந்தக் கேள்வி கேட்டாலும் – அந்தக் கேள்வியைரிபீட் செய்து – அதைக் கேட்கிறீர்களா சார் என்பார்கள். பின்னர் கொஞ்ச நேரம் மௌனம் – பின்னர் அதற்குத் தொடர்பேயில்லாத பதில் வரும்.

3. நாங்கள் அதைச் செய்தோம் இதைச் செய்தோம் என்பார்கள் – தம்பீ, எனக்கு நீ என்ன செய்தாய் என்றுதான் தெரியவேண்டும் என்றால் முழிப்பார்கள். மௌனம். நான் என்ன செய்தேன் என்று கேட்கிறீர்களா சார், எனக் கேட்பார்கள். மறுபடியும் மௌனம். அல்லது சகட்டுமேனிக்குப் பொய்.

4. அது அப்படி செய்யப் பட்டது, இது இப்படி செய்யப் பட்டது என்பார்கள் – என்ன எப்படி என்று கேட்டால், நான் அதைச் செய்தேன் இதைச் செய்தேன் என்பார்கள் – மேலும் அதைப் பற்றிக் கேட்டால், நான் அதை மட்டும் செய்யவில்லை – ‘நான் அவனில்லை’ – நான் இதனை மட்டுமே செய்தேன் – சரி, அதில் என்ன செய்தாய் என்று கேட்டாம் – மௌனம்.

5. 7ஆவது செமஸ்டர் வரை படித்ததெல்லாம் மறந்து விட்டது என்பார்கள் – எட்டாம் செமஸ்டரில் ‘ப்ரோஜெக்ட்’ செய்தோம் என்பார்கள். அதில் என்ன செயதீர்கள் என்றால் மறுபடியும் உளறல், சொதப்பல்.

6. யார்தான் சொன்னார்களோ – இந்தப் பையன்கள் மகாமகோ கலைச்சொற்கள், சுருக்கங்கள் எல்லாம் தப்பும் தவறுமாக சுருக்கி விரித்து ஏகப்பட்ட அபத்தங்களைச் செய்தனர். சொல்லுக்குச் சொல், கோட்பாட்டுக்குக் கோட்பாடு தாறுமாறாகத் தாவி ஒரே கந்தறகோளம் – ரத்தக் களறி

7. I am team player, I am hardworking, I know java, please give me job என்று சொல்வார்கள். (யார் தான் இவர்களுக்கு இப்படிப் பேசச் சொல்லிக் கொடுத்தார்களோ!)

8. ஒருவர் கூட நான் கொடுத்த புதிர்களைப் பற்றிக் கேட்கவேயில்லை (ஆக, இவர்களுக்கு எதையும் பகுத்தறியவே தோன்றவில்லை)

தொடரத் தொடர – எனக்கு முட்டிக் கொண்டு வருகிறது…

சரி, நான் ஒருவரையும் தேர்வு செய்யவில்லை. கணக்குப் பார்த்தால் அப்படியும் இப்படியும் சுமார் 14 மணி நேரங்கள் இந்த விவகாரத்தில் செலவழித்திருக்கிறேன். வருத்தம் தான். நம் இளைஞர்கள் என்னவாகிக் கொண்டிருக்கிறார்கள்? நாம் அவர்களுக்கு என்ன செய்யக் கூடும்? அவர்கள் என்னதான் செய்யவேண்டும்?  கோபம் தான். அதற்கு மேல் அயர்வு

ஆனால் சொன்னசொல்படி, அந்தத் தொழில் நுட்ப இளைஞர் ரூபாய் பதினைந்தாயிரம் கொடுத்தார்.

ஆக, என் பள்ளியில் சுமார் மூன்று-நான்கு நாட்களுக்கு அனைவருக்கும் மதியவுணவுச் சோறு + காலைமாலைச் சிற்றுண்டி பொங்க வைத்த அந்த தொழில் நுட்ப இளைஞனுக்கு என் நன்றிகள். அவன் முனைவு வெற்றிபெற வாழ்த்துக்களும்…

குறிப்பு: தமிழ் இளைஞப் பொறியியலாளர்கள் பற்றி எழுதியிருக்கிறேன், ஆனால் எங்கே அந்த ‘அரூபக் கருத்துநிலை வாத்துக்கள்’ என்று கேட்கிறீர்களா?

அந்தக் கேலிச்சித்திரம் இங்கே. Abstruse Goose எனப்படும் கார்ட்டூன் தொகுப்பில் உள்ள ஒருகார்ட்டூன் தான் இது.

the_singularity_is_way_over_there

Sunday, June 9, 2013

வண்ணதாசன் கவிதை


நீ வருவதற்காகக்
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்துகொண்ட 
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்.
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்துவிட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக் கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக் குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது.


Monday, June 3, 2013

இடைவெளி - மனுஷ்யபுத்திரன்


ஒரு எழுத்தாளன் எழுதாமல் இருப்பது என்பது ஒன்று அவனது ஆயத்தமாகும் காலமாக இருக்கவேண்டும் அல்லது சபிக்கப் பட்ட காலமாக இருக்கவேண்டும். இரண்டில் எது எனக்குப் பொருத்தமான காலம் என்று தீர்மானிக்க முடியாமல் குழப்பமடைகிறேன். ‘கடவுளுடன் பிரார்த்தித்தல்’ தொகுப்பில் இடம் பெற்ற ‘அன்பிற்காக’ என்ற கவிதையை நான் எழுதி முடித்த தினத்தில் எனக்குத் தெரியாது அதற்குப்பிறகு ஒரு நீண்ட காலத்திற்கு நான் ஒரு வரிகூட எழுதப் போவதில்லையென்று.

யார் படைப்பின் ஊற்றுக்கண்களில் ஒரு அரக்கை வைத்து அடைத்து விட்டு போகிறார்கள் என்று தெரியவில்லை. தூக்கமற்றுத் தவித்த பல இரவுகளில் மனம் கலைந்து எழுத முயன்று தோல்வியடைந் திருக்கிறேன். அது ஒரு ஆதார மான உடல் உறுப்பு திடீரென செயலற்று போவது போல. பிறகு பனி விலகும் காலம் வந்தது. கடந்த ஆறு மாதத்தில் நான் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கையும் அவற்றின் தளமும் எனக்கே நம்ப முடியாதது. எத்தனை முறை நான் அழிந்தாலும் நான் மீண்டு வருவேன் என்ற உறுதியை தந்த நாட்கள் இவை. இப்போதும் ஒவ்வொரு கவிதையையும் எழுதிமுடிக்கும் போது இது ஒரு வேளை கடைசிக் கவிதையாக இருந்து விடக்கூடாது என்கிற சின்ன பதட்டத் தோடுதான் அதிலிருந்து விலகிச் செல்கிறேன்.

Monday, May 27, 2013

நடந்து கொண்டிருந்தோம் (inspired by the experiences from our wholenight walking)

நடந்து கொண்டிருந்தோம்..

ஊர் அடங்க தொடங்கி இருந்தது..
இரவு மெல்ல விழிக்க
பௌர்ணமி நிலவு துரத்த
நடந்து கொண்டிருந்தோம்..

சலசலத்த பேச்சு வாக்கியங்களாகி
வார்த்தைகளாகக் குறைய
நடந்து கொண்டிருந்தோம்

சாலை முட்ட சென்ற வாகனங்கள்
அருகி ஓன்றிரண்டாய்
சிவப்பு விளக்கும் மறுத்து செல்ல
நடந்து கொண்டிருந்தோம்

கடைசி பேருந்தும் கடந்து சென்றது

நாள் முழுக்க பாதங்களை சுமந்து
ஓய்ந்த ரயில் நிலைய படிக்கட்டுகள்
கொஞ்ச நேரம் எங்கள்
முதுகுகளையும் சுமந்தன..

நடந்து கொண்டிருந்தோம்
பதினேழு பதிமூண்றாகி
பதினோண்றானது
எங்கள் எண்ணிக்கை..

எங்களைத் துரத்திய நிலவும்
கண்ணாம் பூச்சி ஆட்டம் துவங்கியது

கும்மிருட்டில் கடந்து சென்றன
மூன்று பூங்காகளும்
ஒரு ஹைதராபாத் சாலையும்..

அடைந்தோம் மலையுச்சி பூங்காவை
உணர்ந்தோம்
துயில் மறுத்தது நாங்கள் மட்டுமல்ல
வேறு பல ஜோடிகளும் என்று..
காதலை வாழ்த்திவிட்டு
நடந்து கொண்டிருந்தோம்

இன்னூமொரு மலை முகட்டுப் பூங்கா
நடுநிசி
எங்களையும் எங்களையும் தவிர
வேறு எந்த சலனமும் இல்லை

அந்த நேரத்தில் அந்த இடத்தில்
உடற் பயிற்சி செய்யும்
வயோதிக தம்பதிகள்
சிலிர்த்து போன நாங்கள்
அவர்களூக்கு கால்கள் இருப்பதை
உறுதி செய்துவிட்டு
நடந்து கொண்டிருந்தோம்

மலை இறங்கினோம்
எண்வரானோம்
துறைமுகத்தின் வால் பிடித்து
நடந்து கொண்டிருந்தோம்

பழைய மலேயன் ரயில் நிலையம்
கம்பீரமாய் கடந்து சென்றது

சோர்வு கவ்வ துவங்கியது
தேநீர் தேடல் ஆரம்பம்.
கண்டோம் கழுவி கவிழ்க்க பட்ட
மெக்டனல்டை..
அந்த நேரத்திலும் கும்பலாய்
இளையர் கூட்டம்.
சுடுபான தெம்பில்
நடந்து கொண்டிருந்தோம்

முதல் பேருந்தும்
காவலர் ரோந்து காரும் கடந்து
சென்றன
லேசாய் தென்றல் வீசியது
நடந்து கொண்டிருந்தோம்

கரையோர பூங்காவும் வந்தது
காலைக் கடன் கழித்தோம்
வேகம் குறைய
நடந்து கொண்டிருந்தோம்

மெல்ல விடியலும் எட்டிப் பார்த்தது
அதிகாலை புகைப்பட வகுப்புகளுக்காக வரத்துவங்கினர்
ஓட்ட நடை பயிற்சியரும் வந்தனர்
சில காலை வணக்கங்களும்
பல புன்முறுவல்களும்

மெரினா நீர் தேக்கதை தாண்டி
நடந்து கொண்டிருந்தோம்















கூட்ஸ் பயணம்- எஸ். ராமகிருஷ்ணன்

எத்தனையோ ரயில்களில் ஏதேதோ ஊர்களுக்குப் பயணம் செய்திருக்கிறேன், ஆனால் என்னால் மறக்கமுடியாத ஒரு பயணம் கூட்ஸ் ரயிலில் போனது,

பள்ளிநாட்களில் வீட்டின் அருகாமையில் உள்ள ரயில்வே நிலையத்தினை கடந்து செல்லும் கூட்ஸ் ரயில்களை வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருப்பேன்,

அப்போதெல்லாம் கூட்ஸ் ரயிலின் கடைசிப்பெட்டியில் ஒற்றை ஆளாக நின்றபடியே கொடியை வீசி அசைக்கும் கார்டினைப் பார்த்து கையசைப்பது வழக்கம், ஒரு சிலர் பதிலுக்கு கையசைப்பார்கள், பலர் இறுக்கமான முகத்துடன் வெறித்து பார்த்தபடியே கடந்து போய்விடுவார்கள்,



இந்த உலகிலே மிகதனிமையானது கார்டு வேலை என்று தோன்றும், ரயில்களைப் போல வேகமாக செல்லாமல் கூட்ஸ் மெதுவாகவே செல்லும், அதிலும் பல இடங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்து போக ஒதுங்கி வழி விட்டு நிற்க வேண்டியிருக்கும், கூட்ஸ் ரயிலின் ஒசை பாசஸ்சர் ரயிலின் ஒசையை விட மாறுபட்டது, கூட்ஸ் ரயில் போவது வீட்டின் அறைகள் ஒன்றாக நகர்ந்து போவதைப் போன்றே தோன்றும்

கூட்ஸ் ரயிலை ஒட்டுகிறவராவது கடுமையாக வேலை செய்து கொண்டிருப்பார், கடைசி பெட்டியில் இந்த கார்டு என்ன தான் செய்வார், அவர் ஏன் வெள்ளை உடை அணிந்திருக்கிறார், ரயில் நிலையத்தில் கூட்ஸ் நிற்காத போது ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் ஒருவர் நின்று கொண்டு வளையம் ஒன்றை வீசி எறிவார்கள், கார்ட் அதைச் சரியாக தனது கைகளுக்குள் எப்படி வாங்கி கொள்கிறார் என்று ஆச்சரியமாக பார்த்திருக்கிறேன்,

ஏனோ அந்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருந்த்து, பேசாமல் ஒரு புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு கூட்ஸ் ரயிலின் கடைசிப்பெட்டியில் அமர்ந்தபடியே நிம்மதியாகப் படித்துக் கொண்டிருக்கலாம் என நினைத்திருக்கிறேன்,

ரயிலில் ஏறிப்போவது போல கூட்ஸில் யாரும் ஏறிப்போய்விட முடியாது, அதுவே அதன்மீது கூடுதல் கவர்ச்சியை தந்திருந்தது, எப்படியாவது ஒரு நாள் கூட்ஸ் ரயிலில் அதுவும் கார்ட் கூடவே பயணம் செய்ய வேண்டும் என்று தோன்றியது, ஆனால் அதை எப்படி சாத்தியமாக்குவது என்று தெரியவேயில்லை,

கடந்து செல்லும் கூட்ஸ் ரயில் பெட்டிகளை எண்ணுவது சுவாரஸ்யமான பொழுது போக்கு, ஒரு நாளும் ஒரே போல எண்ணிக்கை கொண்ட இரண்டு கூட்ஸ் ரயில்கள் ஒடுவதேயில்லை என்பதே நான் கண்டறிந்த உண்மை, அதன்பிறகு கூட்ஸ் பெட்டிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை கொண்டு அதில் தானியம் ஏற்றிக் கொண்டு போகப்படுகிறதா, சிமெண்ட் மூடைகள் துறைமுகத்திற்கு போகிறதா என்பதை கூட கண்டுபிடிக்க பழகினேன்,

ஒருமுறை கடைசிபெட்டியில் ஒரு முக்காலி போட்டுக் கொண்டு இளவயது கார்டு ஒருவர் புத்தகம் படித்தபடியே போனது எனக்குள் இருந்த ஆசையை மேலும் கிளறிவிட்டது,

ரயில்வே நிலையத்தில் கூட்ஸ் வந்து நின்றிருந்த சமயம் ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் அதனுள் ஏறி உள்ளே எப்படியிருக்கிறது என்று பார்த்தேன், அது ஒரு சிறிய அறை, உள்ளே கொடி வைப்பதற்காக சொருகு கம்பி, சிக்னல் விளக்கு, சிறிய கையடக்கமான நோட்டுகள், ஒரு விசில், மடக்கு நாற்காலி, ஒரு மரப்பெட்டி, டார்ச் லைட், இரும்பு கருவிகள் சில இவையே அதனுள்ளிருந்தன, கூட்ஸ் ஜன்னல் வழியாக வெளியுலகைப் பார்ப்பதற்கு விநோதமாகத் தெரிந்தது,

கூட்ஸ் ரயிலில் பயணம் செய்வதற்கு என்ன தான் வழி என்று பலரிடமும் கேட்டிருக்கிறேன், ஒருவராலும் உதவ முடிந்ததில்லை, கல்லூரி நாட்களின் போது பழனி என்றொரு நண்பன் அறிமுகமானான், அவனது அப்பா ரயில்வேயில் பணியாற்றுகிறார், அதுவும் தொழிற்சங்கவாதி என்றான், அவனது அப்பாவை அறிமுகம் செய்து வைக்கும்படியாக கேட்டுக் கொண்டேன்,

எனது ஆசையை அவனது அப்பாவிடம் சொன்னபோது இன்னும் சின்னபிள்ளையா இருக்கியேப்பா, கூட்ஸ் ரயில்ல போறதுல என்ன இருக்கு, வெறும் அலுப்பு, எனக்கு தெரிந்த தனராஜ்னு ஒரு கார்டு இருக்கார், அவர் கிட்ட கேட்டுப் பாக்குறேன், தூத்துக்குடி வரைக்கும் உன்னை கூட்டிகிட்டு போவார் என்றார்

அவர் சொல்லி பல மாதங்கள் ஆகியும் தனராஜ் என்னை அழைக்கவேயில்லை, தற்செயலாக ஒருநாள் இரவு பழனியின் அப்பா என்னை அழைத்து நாளைக்கு உன்னை கூட்டிகிட்டு போறேனு சொல்லியிருக்கார் என்றார்

அன்றிரவு என்னால் உறங்கவே முடியவில்லை, சட்டென வயது கரைந்து எனது பத்து வயதிற்குத் திரும்பிப் போய்விட்டதை போலவே உணர்ந்தேன், மறுநாள் காலை கூட்ஸ் ரயிலில் படிப்பதற்காக மாக்சிம் கார்க்கியின் சிறுகதைகளை கையில் எடுத்துக் கொண்டேன், கூட்ஸ் ரயில்களை பற்றி அற்புதமாக எழுதியவர் அவர் தானே,

தன்ராஜ் வீட்டிற்கு போன போது அவர் என்னை மதுரையை அடுத்த திருமங்கலம் ரயில் நிலையத்தில் போய் காத்திருக்கும்படியாகச் சொன்னார், உடனே டவுன் பஸ் பிடித்து திருமங்கலம் ரயில் நிலையத்திற்கு சென்று காத்துக் கொண்டிருந்தேன், கூட்ஸ் ரயில் எப்போது வரும் என்றே தெரியவில்லை, வெற்றுத் தண்டவாளங்களின் மீது காகங்கள் நடந்து கொண்டிருந்தன, வெயில் ஏறிய பத்து மணி அளவில் அந்தக் கூட்ஸ் மெதுவாக ரயில் வந்து நிற்கத் துவங்கியது,

தன்ராஜ் என்னை கையசைத்து ஏறிக் கொள்ளச் சொன்னார், கூட்ஸ் ரயிலினுள் ஏறி நின்று கொண்டேன், நான் ஆசைப்பட்டது இது தான் என்று சந்தோஷமாக இருந்தது., கூட்ஸ் மெதுவாகக் கிளம்பி சீராக செல்லத்துவங்கியது, கடைசி பெட்டியின் இரும்புக் கம்பிகளை பிடித்து நின்றபடியே தூரத்து மேகங்களை, வெட்டவெளியை, மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை, பின்னோடும் மரங்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன், ஒருமுறை கூட்ஸ் ரயில் இரவில் பழுதுபட்டு நின்று போன தனது அனுபவத்தை சொல்லிக் கொண்டே வந்தார் தனராஜ், காதில் கேட்டுக் கொண்டு வந்த போதும் எதுவும் மனதில் தங்கவேயில்லை,

கூட்ஸ் மிகவும் மெதுவாகப் போய் கொண்டிருந்தது, எங்காவது மூடிய ரயில்வே கேட்டிலோ, மரத்தில் ஏறி நின்றபடியோ என்னைப் போல சிறுவன் எவனாவது கூட்ஸ் ரயிலுக்கு கையசைப்பானா என்று ஆசையுடன் பார்த்துக் கொண்டேயிருந்தேன், ஒரு சிறுவனும் கண்ணில் படவேயில்லை, எதிர்த்து வீசி அடிக்கும் காற்றும், வெக்கையும் தூரத்து பனைகளின் ஒலை எழுப்பும் சப்தங்களும், வறண்ட ஆற்று பாலத்தினைக் கடக்கும் போது காணமுடிந்த ஒதுங்கி நின்ற கழுதையின் தோற்றமும், முடிவற்ற தண்டவாளங்களும் என்னை கிறங்கச் செய்திருந்தன,

இப்போது திடீரென மழை பெய்யக்கூடாதா , பெய்தால் கூட்ஸில் இருந்தபடியே மழையை வேடிக்கை பார்க்கும் அபூர்வ அனுபவத்தை பெற்றிருப்பேனே என்றெல்லாம் தோன்றியது

ஒரு யானை மீது அமர்ந்து போவது தரும் விநோத அனுபவம் போலவே கூட்ஸ் ரயிலின் பயணமிருந்தது, நான் ஆசைப்பட்டது போல அங்கே புத்தகம் படிக்க மனமே வரவில்லை, மாறாக கடந்துபோகும் நிலக்காட்சிகள், கூட்ஸின் முணுமுணுப்பு, அதன் லயமான இயக்கம் மேலாகவே கவனம் போய் கொணடிருந்தது,

என் கண்முன்னாடியே அவர் கொடியசைத்து ரயில்நிலையங்களைக் கடந்து போனார், கண்முன்னே அந்த இரும்பு வளையத்தினை கையில் வாங்கி என்னிடம் தந்தார், அவரது பணி ஒவ்வொரு ரயில் நிலையத்தினையும் கூட்ஸ் எத்தனை மணிக்கு கடந்து போனது, எங்கே நின்றது, என்று குறிப்புகளை எழுதுவது என்பதை நேரிலே கண்டு கொண்டேன், கூட்ஸிலிருந்த சரக்குகளை கவனமாக கொண்டு போய்சேர்க்கிற பொறுப்பு அவருடையது என்பதை பற்றி சொல்லிக் கொண்டே வந்தார், எல்லா வேலையும் போல இதுவும் ஒரு வேலை தான், வெயில்காலத்தில இதுல மனுசன் போக முடியாது என்றார்.

தூத்துக்குடி வரும்வரை நான் அமைதியாக வெளியுலகை வேடிக்கை பார்த்தபடியே வந்தேன், அவர் எதற்காக இந்தப் பையன் இப்படி அர்த்தமில்லாமல் கூட்ஸ் ரயிலில் பயணம் செய்ய ஆசைப்பட்டிருக்கிறான் என புரியாதவரை போலவே என்னை பார்த்துக் கொண்டு வந்தார்,

தூத்துக்குடியில் இறங்கியதும் அவர் என்னை அழைத்துக் கொண்டு போய் தேநீர் வாங்கி தந்தார், பிறகு நீ பஸ்ஸை பிடிச்சி வீடு போய் சேர் எனக்கு வேலை கிடக்கு என்றார்,

மாலையில் வீடு வந்து சேர்ந்த போது அம்மா எனது தோற்றத்தை பார்த்த மாத்திரம் கேட்டார்

ஏன் தலை மேல்காலு எல்லாம் புழுதி படிந்து போய் கிடக்கு, எங்கே போய் சுற்றிட்டு வர்றே

கூட்ஸ் ரயிலில் போய்வந்தேன் என்று நான் சொல்லவேயில்லை,

இன்றும் எங்காவது கூட்ஸ்ரயில் போவதைப் பார்க்கும் போது கடைசிப்பெட்டி மீதே கண்கள் போகின்றன, ஏனோ அந்த வசீகரம் குறையவேயில்லை

Saturday, May 25, 2013

அந்தக் காலம் நன்றாக இருந்தது! – கவிஞர் மகுடேஸ்வரன்

அந்தக் காலம்தான்
நன்றாக இருந்தது.
பேருந்துக்குள் கொணர்ந்து
மாலைமுரசு விற்பார்கள்.
எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்
அமர இடங்கிடைக்கும்.
மிதிவண்டி வைத்திருந்தோம்.
நான் பஞ்சர் ஒட்டப் பழகியிருந்தேன்.
எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தார்.
கலைஞரின் அறிக்கைகளைத் தேடிப் படித்தார்கள்.
எல்லா வீடுகளிலும்
முதல் மரியாதை பாடல் ஒலித்தது.
வானொலி நாடகங்களை
ரசித்துக் கேட்டோம்.
சாவி இதயம் பேசுகிறது
பத்திரிகைகள் வந்தன.
எல்லாருமே
அரசுப் பள்ளிகளில் படித்தோம்.
சாலையில்
எப்போதாவது ஒரு வண்டி போகும்.
மழை
நின்று நிதானமாகப் பொழியும்.
சாராயக் கடைகள் இருந்தன
இன்றைய கூட்டம் அக்கடைகளில் இருந்ததேயில்லை.
தமிழாசிரியர்கள்
தந்நிகரற்று விளங்கினார்கள்.
நல்ல நூல்களுக்கு
அன்னம் பதிப்பகம்தான்.
வேலைக்குப் போகாதவன்
எந்தக் குடும்பத்திற்கும் பாரமாயில்லை.
எளிதில்
மணப்பெண் கிடைத்தாள்.
வெஸ்ட் இண்டீசை
வெல்லவே முடியாது.
சந்தைக்குப் போக பத்து ரூபாய் போதும்.
முடிவெட்ட இரண்டு ரூபாய்தான்.
நகரத்தின் எல்லாக் கடைகளிலும்
மிரட்சியின்றி நுழைய முடியும்.
யுவதிகள் பாவாடை தாவணி உடுத்தினர்.
சிலிண்டர் மூடுதுணிபோல்
யாரும் நைட்டி அணியவில்லை.
ராமராஜனை
விரும்பி ரசித்தோம்.
அதிகாலைகள்
பறவைக் கீச்சுகளால் நிரம்பியிருந்தன.
புதுத்துணிகளை விஷேசங்களுக்கு என்று
உடுத்தாமல் வைத்திருந்தோம்.
ஊசல் சுவர்க்கடிகாரத்திற்கு
சாவி கொடுத்தோம்.
தானாய்த் துயில்களைந்து எழுந்தோம்.
இருள்கட்டியவுடன் உறங்கச் சென்றோம்.
ஆம்
அந்தக் காலம் நன்றாக இருந்தது !
-கவிஞர் மகுடேஸ்வரன்

Saturday, May 11, 2013

Blog of sujatha award winner

http://www.nisaptham.com/?m=1

Writer sujatha memorial award winners blog.The author of this blog is awarded as the best internet writer.,

Saturday, April 6, 2013

வெண்டைக்காயில் ஒளிந்தவர்கள்!- நா. முத்துக்குமார்



கிணற்றடித் தண்ணீரை
குடித்து வளரும்
எங்கள் வீட்டிலும்.

வதங்கிச் சுருண்டு
இலைகளில் தொங்கும்
செம்பருத்திப் பூக்கள் தவிர்த்து
அம்மாவினுடையதும்
அக்காவினுடையதுமாக
விரல்களைக் கடன் வாங்கி
பச்சையாய் துளிர்க்கும்
வெண்டைக்காய்ச் செடிகள்
அத்தோட்டத்தின் தனித்தன்மை.

'மூளைக்கு நல்லது' என்று
மருத்துவ குணம் கூறி
அதன் காய்களில் ஒளிந்திருக்கும்
என் அல்ஜிப்ரா கணக்கி இற்கான
விடைகளை நோக்கி
ஆற்றுப்படுத்துவாள் அம்மா.

மதிய உணவில்
பெரும்பான்மை வகிக்கும்
அதன் 'கொழ கொழ' த் தன்மை
வழக்கம்போல் பள்ளியில்
என் விரல்களில் பிசுபிசுத்து
வராத கணக்கைப் போல்
வழுக்கிக் கொண்டிருக்கும்.

முன்புக்கு முன்பு
அதன் காம்புகள் கிள்ளி
கம்மல் போட்டுக்கொள்ளும்
அக்கா இப்போது,
வைரங்களை நோக்கி
விரியுமொரு கனவில்
' உங்களுக்கு வாக்கப்பட்டு
என்னத்தைக் கண்டேன்' என்று
அத்தானிடம் பொருமுகி்றாள்.

கடன்முற்றித் தத்தளித்த சூழலில்
கியான்சந்த் அண்ட் சன்சுக்கு
கைநடுங்கி கையெழுதுத்திட்டு
வீட்டுடன் தோட்டமும்
விற்றார் அப்பா .

முன்வாசலில் தொங்கும்
குரோட்டன்ஸ் செடி கடந்து
பிஞ்சு வெண்டைகள் பொறுக்கி;
கூர்முனை ஒடித்து;
தள்ளு வண்டிக்காரனிடம்
பேரம் பேசுகையில்
இப்போது உணர்கிறேன் ............

ஒவ்வொரு வெண்டைக்காயிலும்
ஒளிந்திருக்கிறார்கள்
மென்மையான
விரல் கொண்ட
ஒரு அம்மா ;

கனவுகள் விரியும்
ஒரு அக்கா ;

கைகள் நடுங்கும்
ஒரு தந்தை ;

மற்றும்
கணக்குகள் துரத்தும்
ஒரு பையன்.
****

Monday, March 4, 2013

பெண்


சிற்பமாய் செதுக்கும் உளிகளுக்குத் தயாராய்த் தான் இருக்கிறாள் பெண்...
சிற்பிகளுக்குத் தான் பொறுமை இல்லை !

முயற்சி !


தோழா,
கடலின் ஆழத்தில் தான் முத்தெடுக்க முடியும்
என்று  முற்றிலுமாய் அறிந்த பிறகு...
ஏன் கரையில் அமர்ந்து கொண்டு
சிப்பிகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறாய் ?

Sunday, March 3, 2013

என் டைரி குறிப்புகள்....


மார்கழி மாத நடுங்கும் அதிகாலை...
ஆழி மழைக்கண்ணா வை மழலையில் பாடிய அந்த நிமிடத்தின் சிலிர்ப்பை..

இலங்கை வானொலி அப்துல் ஹமீதின் காந்தர்வக்குரலில்
நேயர் விருப்பத்தில் என் பெயர் கேட்ட அந்த நிமிடத்தின் பிரமிப்பை...

இராம கிருஷ்ணரையும் இராம லிங்கரையும் அறிமுகம் கண்டு
அசைவம் தவிர்க்க முடிவு செய்த அந்த நிமிடத்தின் தீர்க்கத்தை...

புதிதாய் வெளி வந்த புத்தகங்களை சிறு நூலகத்தில் எதிர்
பார்த்துக்காத்திருந்த அந்த நிமிடத்தின் ஏக்கத்தை...

திடீரென நினைவு வந்த கவிதை வரிகளை
நடு இரவில் விழித்து குறிப்பு எடுத்துக்கொண்ட அந்த நிமிடத்தின் சுவாரஸ்யத்தை ...

முதல் முதலில் வெளி வந்த கதைக்காக
25 ரூபாய் மணி ஆர்டர் வாங்கிய அந்த நிமிடத்தின் தன்னம்பிக்கையை...  

வீட்டு முற்றத்தில் ஆனந்தமாய் மழையில் நனைந்த
அந்த நிமிடத்தின் சுதந்திரத்தை...

நீ தான் பொறுப்பு என்று பாட்டி சொன்ன ரோஜா செடி
முதல் மொட்டு விட்ட அந்த நிமிடத்தின் பரவசத்தை...

என் சிநேகிதியிடம் மன வருத்தம் ஏற்பட்ட போது
மனம் குழம்பி அதை சரி செய்ய போராடிய  அந்த நிமிடத்தின் பர பரப்பை...

மனம் சோர்ந்து வாடுகையில் எதிர் பாராமல்
ஒலித்த இளையராஜா பாடலின் சுகத்தை...

அலை பெரிதாக வந்தால் என்ன செய்வதென்று திட்டம் தீட்டிக்கொண்டிருக்கையில்
திடீரென வந்து முழுவதும் நனைத்த அந்த நிமிடத்தின் அலறலை...

மாவட்ட அளவில் மதிப்பெண் பெற எதிர் பார்க்கிறோம்
என்று சொன்ன அந்த நிமிடத்தின் பயம் கலந்த பொறுப்புணர்ச்சியை...

முதல் முதலில் என் பிள்ளையின் குரல் கேட்டு ஸ்பரிசித்த
அந்த நிமிடத்தின் பேரானந்தத்தை...

எந்த கேமரா வும் பதிவு செய்ய முடியாத ஆழ் மனதின் இந்த உணர்வுகளை...

மீண்டும் வாழ்ந்து பார்க்கிறேன்...
டைரி குறிப்புகளில் தேக்கி வைத்த என் வார்த்தைகளின் ஊடாக...

எந்திர மயமான வாழ்க்கையில் என்னை
உயிர்ப்புடன் வைத்திருக்கும் அந்த நினைவுகள்...

மீண்டும் கிடைக்குமா  அந்த நிமிடங்கள்  !!!
ஏக்கத்தில் ஒரு சொட்டு கண்ணீர்...
அதையும் பதிவு செய்கிறேன்...
நிரப்பப்படாமல் இருக்கும் என் 2013 டைரியில்...!

Wednesday, February 13, 2013

மீண்டும் ஒரு அடர் மழைக்காலை

சின்னத்துளிகளின் மௌனத் தாளங்கள்
குடை (ம)துறந்த காதுகளுக்கு மட்டும்..

கருமேக போர்வை துயில் மீளா
சூரியக் கரங்களின் காலை கிறுக்கல்
அலை பேசி முகம் மறுத்த ஜன்னலோர விழிகளுக்கு மட்டும்..

மீண்டும் ஒரு அடர் மழைக்காலை

Monday, January 14, 2013

இவ்வளவுதான் முடிகிறது - விக்ரமாதித்யன் நம்பி

விக்ரமாதித்யன் நம்பி
நேற்று நண்பகலில்
கோயிலுக்குப் போய்விட்டு
வருகிற வழியில்
கீழே கிடந்த
ஸ்கூட்டர் சாவியை எடுத்து
பக்கத்திலிருந்த டீக்கடையில்
கொடுத்துவிட்டு வந்தேன்
(தேடிக்கொண்டு வந்தால்
கொடுத்துவிடச் சொல்லி)
போன மாசம்
கபால¦ஸ்வரர் கோயில் போயிருந்தபோது
ஸ்தல விருஷத்துக்கு அண்டையில் கிடந்த
முள்கொம்பை எடுத்து
ஒரு ஓரமாய்ப் போட்டுவிட்டு வந்தேன்
கொஞ்ச நாள்கள் முன்பு
தெரு நடுவே இறைந்துகிடந்த
கண்ணாடிச் சில்லுகளைப் பொறுக்கி
தூரப் போட்டுவிட்டு வந்தேன்
இரண்டு மூன்று மாசத்துக்கு முன்னால்
இளங்கவிஞன் ஒருவன் கவிதைகள் பற்றி
விலாவாரியாய்
கட்டுரையெழுதி அனுப்பி வைத்தேன்
இந்தக் கல்வியாண்டில்
தமிழக அரசுத் தயவில்
என் சின்ன மகனுக்கு
திரைப்படக் கல்லூரியில்
இடம் வாங்கிக் கொடுத்தேன்
வேலையில்லாமல்
திண்டாடித் திணறிப்போன பெரியவனை
இயக்குநர் நண்பர் ஒருவரிடம்
உதவியாளராகச் சொல்லிச் சேர்த்து விட்டிருக்கிறேன்
மனைவியிடம்
சண்டை போடாமலிருக்க தீர்மானித்திருக்கிறேன்
இனிமேல் கைநீட்டுவதில்லை
என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன்
அம்மாவிடம்
கோபப்படாது இருக்கிறேன்
நண்பர்களை
தொந்தரவுபடுத்தக்கூடாது என்றிருக்கிறேன்
எழுதுவது படிப்பதில்
மும்முரமாய் ஈடுபட்டிருக்கிறேன்
எவ்வளவு நினைத்தாலும்
இவ்வளவுதான் முடிகிறது
இந்த வாழ்க்கையில். 


- விக்ரமாதித்யன் நம்பி