Tuesday, August 7, 2012

அதிகாலைப் பொழுது ....

இளஞ்சிவப்புக் கதிரவன் உதயமும்
கருஞ்சிவப்பு சேவலின் கூவலும்
நிறைந்த வெகுசன மக்களின்
விடியற்காலை வேளை.

பாதி உறக்கத்துடன்
படிக்கும் மாணவர்கள்.

நாட்டுச் சேதி தெரிய
நாளிதழுடன் காதல் நடத்தும்
நாற்பதைத் தாண்டியோர்.

நடைபயிலும் சிறு குழந்தைகள்
நடைப் பயிற்சி செய்யும் வயதானோர்.

பண்டைய பாடலை 
தொண்டை கிழிய இசைக்கும்
அண்டை வீட்டு வானொலி.

கோலமிடும் தாவணிப் பெண்கள்
குழாயடிச் சண்டையிடும் கோவக்காரப்  பெண்கள்
குத்து விளக்கு ஏற்றும் குடும்பத் தலைவிகள்.

பாலூட்ட குழந்தைக்குப்
பாட்டுச் சொல்லித் தாலாட்டும்
தாத்தா பாட்டி.

வேலைக்குச் செல்லும்
அலுவலகப் பணியாளர்கள்
வேலை வாய்ப்பு அலுவலகத்தின்
முன் காத்திருக்கும் பட்டதாரிகள்.

திருப்பதி தரிசனத்தை மிஞ்சும்
வரிசையில்அமெரிக்கத் தூதரகத்தின்
முன் காத்திருக்கும்
 
விசா விரும்பிகள்.

குளிச்சியா , காப்பி குடிச்சியா என
தினம் மறவாது குறுஞ்செய்தி
பரிமாறும் காதலர்கள் என

அனைவரும் தத்தம்
பணியில் பரபரப்புடன் காணப்படும்
அதிகாலைப் பொழுது !

சூரிய ஒளி சன்னல் வழியே
கன்னத்தில் பட
அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா என
அலுத்துக்கொண்டே போர்வையை
இழுத்து முகத்தோடு மூடி
உறங்கிக் கொண்டு
இருக்கும் நான் !!!

                                                                                         

                                                                              - இராஜேஷ் குமார்

No comments:

Post a Comment