Tuesday, December 25, 2012

எங்கே மச்சான் நீ போன? ஏங்க வெச்சி ஏன் போன?

எங்கே மச்சான் நீ போன?
ஏங்க வெச்சி ஏன் போன?

சித்திரைக்கு வந்திடுவேன்னு
சொல்லித்விட்டு போன மச்சான்
பத்து வருஷம் ஆயிடிச்சி
பாத்து பாத்து பூத்திடிச்சி
எங்கே மச்சான் நீ போன?
ஏங்க வெச்சி ஏன் போன?

நீயும் நானும் சேர்ந்து
வாங்கி வந்த கன்னுகுட்டி
பேரன் பேத்தி எடுத்திடிச்சி
பேத்தி கூட சமஞ்சிடிச்சி
எங்கே மச்சான் நீ போன?
ஏங்க வெச்சி ஏன் போன?

பக்கத்துக்கு வீட்டு பரமசிவம்
பல்ல இளிச்சி சிரிக்கிறான்
பக்கத்துல நீ இல்ல
கொல்ல பக்கம் கூவுறான்
எங்கே மச்சான் நீ போன?
ஏங்க வெச்சி ஏன் போன?

நீ பிரிஞ்ச அந்த நாள்
வாங்கி தந்த பட்டு சீல
பெட்டிக்குள்ள பூட்டி வெச்சேன்
கொசுவம் அது கண்டதில்ல
எங்கே மச்சான் நீ போன?
ஏங்க வெச்சி ஏன் போன?

மஞ்சளும் குங்குமமும்
மரிக்கொழுந்து சந்தனமும்
பறிகொடுத்து நிக்கிறேன்
பறிச்சிக்கிட்டு போனியே
எங்கே மச்சான் நீ போன?
ஏங்க வெச்சி ஏன் போன?

ஆண் மூள உச்சியில
பெண் மூள உள்ளத்துல
உச்சி மூள மறந்திடலாம்
நெஞ்சு மூள மறந்திடுமோ
எங்கே மச்சான் நீ போன?
ஏங்க வெச்சி ஏன் போன?

உன் நெஞ்சுக்குள்ள குழி இருக்கா?
குழிக்குள்ள இடமிருக்கா?
கொன்னு என்ன பொதைச்சிக்கிட்டு
போயிருக்க கூடாதா?
எங்கே மச்சான் நீ போன?
ஏங்க வெச்சி ஏன் போன?

வாழ்வோ சாவோ உன்னோடதான்
வாக்கு எல்லாம் கொடுத்தியே
வாழ நீ இல்ல
சாக உன் மடியில்ல
எங்கே மச்சான் நீ போன?
ஏங்க வெச்சி ஏன் போன?

Monday, November 12, 2012

தீபாவளி பரிசு



தொலைதூர தேசத்தில்
இன்னுமொரு தீபாவளி இரவு
நாள்காட்டி கிழியலாய் கடந்து செல்கிறது..

எல்லாம் இருப்பது போலத்தோன்றினாலும்
எதையெல்லாம் இழந்திருக்கிறோம்
என எண்ணிப் பார்க்க நேரம் ஒதுக்கியதில்லை..

ஓடிய ஓட்டத்தில் வாழ்க்கையின் பாதியைத் தாண்டி விட்டேன்.

இந்த தீபாவளிக்கு நான் கேட்கும் பரிசு

என் இளமையில் கள்ளமின்றி குதூகலித்த
அந்த தீபாவளி...

ஓவ்வொன்றாய் வெடித்த ஓலைப் பட்டாசும்

பெயர் மறந்த முதல் தோழனுடன்
அரை மணி வாடகை சைக்கிள் சவாரியும்.

முகம் மறந்த முதல் காதலின்
புத்தாடை புன்சிரிப்பும்

முதல் நாள் முதல் காட்சி
திரைப்பட கொண்டாடமும்


இனி எந்த தீபாவளியில் கிட்டிடும்

இன்னுமொரு பிறப்பிலா?

காத்திருக்கிறேன்...

Sunday, November 11, 2012

பேயோன் காதல் கவிதை

உன்னைப் பார்த்து
ஓடோடி வரும் கடல்
என்னையும் பார்த்துவிட்டு
வெறுத்துத் திரும்பிச் செல்கிறது
நப்பாசையில் மீண்டும் வந்து பார்க்கிறது
மீண்டும் ஏமாந்து செல்கிறது
இப்படியே ஒரு மணிநேரம்

Thursday, November 1, 2012

ரயிலேறிய கிராமம் - எஸ். இராமகிருஷ்ணன்

எதிர்பாராமல் வாசிக்க கிடைக்கும் நல்லபுத்தகம் மனதை மிகுந்த உற்சாகம் கொள்ள வைத்துவிடும், டெல்லி உலகப் புத்தகக் கண்காட்சியில் தற்செயலாக வாங்கிய THIRD CLASS TICKET என்ற Heather Wood ன் புத்தகத்தை வாசித்து முடித்தபோது இத்தனை நாள் இதை எப்படித் தவறவிட்டிருந்தேன், அற்புதமான புத்தகம் என்று மகிழ்ச்சியாக இருந்தது.

இது ஒரு உண்மைச் சம்பவம் என்பது கூடுதலாகப் புத்தகத்தின் மீது மதிப்பு வரும்படியாக செய்திருந்தது, கடந்த இரண்டு நாட்களாகவே இதைப்பற்றி சந்திக்க வரும் நண்பர்கள் பலருடன் பேசிக் கொண்டிருந்தேன், எப்படி இதைத் திரைப்படமாக எடுக்காமல் இத்தனை ஆண்டுகாலம் விட்டுவைத்திருக்கிறார்கள் என்று வியப்பாக இருந்தது, யாராவது இதைத் தமிழில் மொழியாக்கம் செய்தால் நிச்சயம் வரவேற்பு கிடைக்கும்

இந்தியாவைப் பற்றி வெளிநாட்டவர்கள் எழுதும் பயணநூல்களில் தொன்னூறு சதவீதம் குப்பையானவை, ஸ்டார் ஹோட்டல்களில் தங்கிக் கொண்டு ம்யூசியம், கோட்டைகள், யானைச்சவாரி, வனச்சுற்றுலா என்று பொழுதுபோக்கியதைப் பற்றி சலிப்பூட்டும் வகையில் எழுதியிருப்பார்கள், இன்னொருவகை எழுத்து காசி, இமயமலை, நேபாளம் என்று சாமியார்களையும், ஞானிகளையும் தேடியதாக இருக்கும், இரண்டுமே எனக்கு விருப்பமானவையில்லை

ஆகவே இந்தியாவைப் பற்றிய பயணநூல் எதையும் வாங்க மாட்டேன், இந்த புத்தகத்தை வாங்க வைத்தது அதன் தலைப்பு, மற்றும் அதற்கான முகப்பு புகைப்படம், கையில் எடுத்துப் பத்துப் பக்கம் புரட்டியதும் இது மாறுபட்ட புத்தகம் என்று உணர்ந்து வாங்கிக் கொண்டேன்,

திருவண்ணாமலை செல்லும் பயணத்தில் இப்புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டேன், மறுநாள் திரும்பி வருவதற்குள் புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டேன்

பயணம் மனிதர்களுக்கு எதையெல்லாம் கற்றுத்தருகிறது என்பதற்கு சாட்சி போலிருக்கிறது இப்புத்தகம், தொலைக்காட்சி பிம்பங்களாக உலவும் இந்தியாவைத் தாண்டி, உண்மையான இந்தியாவை அறிந்து கொள்ள முற்படும் ஒவ்வொருவரும் அவசியம் இந்நூலை வாசிக்க வேண்டும்.

1969ல் ஆண்டு வங்காளத்தின் மிகச்சிறிய கிராமம் ஒன்றினைச் சேர்ந்த 44 பேர் ஒட்டுமொத்த இந்தியாவையும் சுற்றிபார்த்துவருவது என்று ஒரு பயணம் கிளம்பினார்கள், இது புனிதப்பயணமோ, சுற்றுலாவோ கிடையாது, அறிவையும் அனுபவத்தையும் தேடிய யாத்திரை,

அவர்கள் அதுவரை தனது சொந்தக் கிராமத்தை தவிர வேறு எந்த ஊரையும் பார்த்தவர்கள் கிடையாது, வாழ்வில் முதல் முறையாக வெளியூர்களுக்குப் பயணம் கிளம்பினார்கள்,

கல்கத்தாவில் துவங்கி காசி, சாரநாத், லக்னோ, ஹரித்துவார், டெல்லி, ஆக்ரா ஜான்சி, குஜராத், ஆஜ்மீர், ஜெய்பூர், பம்பாய், ஹைதரபாத், மைசூர், ஊட்டி, கோயம்புத்தூர், கொச்சி, கன்யாகுமரி, மதுரை, ராமேஸ்வரம், மகாபலிபுரம், பூரி, கொனர்க், டார்ஜிலிங், காங்டாக் மீண்டும் கல்கத்தா என்று நீள்கிறது இப்பயணம்

இந்த மகத்தான ரயில்பயணத்தில் கிராம மக்கள் கண்ட வரலாற்று முக்கிய இடங்கள், ஆறுகள், மலைகள், முக்கிய நகரங்கள், கலை நிகழ்ச்சிகள், அதனால் உருவான அவர்களின் மனநிலை மாற்றங்கள், இந்தியா என்பது எவ்வளவு மாறுபட்ட நிலப்பரப்பு மற்றும் பண்பாடுகளின் ஒருமித்த சங்கமம் என்பதை உணர்ந்த விதம், உணவு மற்றும் பழக்கவழக்கங்களின் மாறுதல்கள், நோய்மையுதல், சுய அடையாளஙகளை மறுபரிசீலனை செய்து கொள்வது என்று பயணம் மனிதர்களுக்குள் எவ்வளவு மாற்றங்களை கொண்டு வருகிறது என்பதை துல்லியமாக விவரித்திருக்கிறார் ஹீதர் வுட்

கிராமவாசிகளின் பயணத்தின் ஊடே தானும் இணைந்த கொண்ட மானுடவியல் ஆய்வாளரான ஹீதர் வுட் 15000 கிலோமீட்டர் தூரம் அவர்களுடன் மூன்றாம் வகுப்பு ரயில்பெட்டியில் பயணம் செய்திருக்கிறார், அவளை வெள்ளைகாரப்பெண் என்று சற்று விலகியவளாக நடத்திய கிராமவாசிகள் பயண முடிவிற்குள் தங்களது சொந்த மகளைப்போல, சகோதரி போல நடத்திய அனுபவத்தை ஹீதர் வுட் உணர்ச்சிபூர்வமாகப் பதிவு செய்திருக்கிறார்

இதுவரை எழுதப்பட்ட பயணநூல்களில் இருந்து மூன்றாம் வகுப்பு டிக்கெட் முற்றிலும் மாறுபட்டது, இது ஒரு இந்திய கிராமம் ஒட்டுமொத்த இந்தியாவை சுற்றி வந்த சவாலான அனுபவத்தின் அசலான பதிவு, கிராமவாசிகளின் கண்களால் இந்தியாவின் பழமையும் புதுமையும் எப்படி உள்வாங்கிக் கொள்ளபடுகின்றன என்பதன் நேரடி சாட்சியாக உள்ளது

சொந்த ஊர்ப் பற்று, தாய்மொழிப்பற்று, உள்ளுர்சாப்பாடு, உள்ளுர் பழக்க வழக்கம் என்று தன்னைச் சுற்றிய சிறிய வட்டத்திற்குள் இருந்தபடியே உலகைப் பார்த்து பழகிய மனிதர்களுக்கு, பயணம் இந்த வட்டத்தை விலக்கி, உலகம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது பாருங்கள் என்று கண்முன்னே காட்டுகிறது,

அந்த அனுபவத்தை வார்த்தைகளால் சொன்னால் புரியாது, வாழ்ந்து அனுபவிக்க வேண்டும், அப்படியான அனுபவத்தைத் தேடிச் சென்ற கிராமவாசிகளை, அவர்களின் விசித்திரமான மன இயல்புகளை அழகாக இப் புத்தகம் பதிவு செய்திருக்கிறது

வங்காள கிராமவாசிகள் ஒரு இந்தியப் பயணம் துவங்கியதே தனிக்கதை,

1969ம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள ரயில்வே துறையின் உயர் அலுவலகம் ஒன்றிற்கு வந்த ஸ்ரீமதி சென் என்ற வயதானபெண், தான் இன்னும் இரண்டு மாதங்களில் நோயில் இறந்து போக இருப்பதாகவும் அதற்குள் தன்னுடைய கிராமத்தைச் சேர்ந்த மக்கள் உலக அனுபவத்தைப் பெற வேண்டும் என்பற்காக, தனது சொத்து முழுவதையும் செலவு செய்து, அவர்களை ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரு முறை பார்த்து வரசெய்ய விரும்புவதாகக் கூறினார்

ரயில்வே அதிகாரி இது முட்டாள்தனமான காரியம் என்பது போல பார்த்தபடியே இந்தியாவை ஏன் அவர்கள் சுற்றிப்பார்க்க வேண்டும் என்று கேட்கிறார்

அதற்கு ஸ்ரீமதி சென் பதில் சொன்னார்

என்னுடைய கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு வெளியுலகமே தெரியாது, அவர்கள் கல்கத்தாவைக் கூட பார்த்தது கிடையாது, உள்ளுரிலே பிறந்து வளர்ந்து, வாழ்ந்து இறந்து போய்விடுகிறார்கள், இந்தியா எவ்வளவு பெரியது, எவ்வளவு கிராமங்கள், நகரங்கள் இருக்கின்றன, யார் நம்மை ஆள்கிறார்கள், எங்கிருந்து ஆள்கிறார்கள், நாட்டின் தலைநகர் எப்படியிருக்கும், பிரம்மாண்டமான மலைகள், நதிகள் எங்கேயிருக்கின்றன, மற்ற ஊர்களில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள், விவசாயிகள் எப்படி விவசாயம் செய்கிறார்கள், சந்தை எப்படியிருக்கிறது, கோவில்கள் எவ்வாறு இருக்கின்றன, வேறுபட்ட உணவும், உடையும், பழக்க வழக்கங்களும் எப்படியிருக்கின்றன என்பதை எல்லாம் அவர்கள் நேரில் அனுபவித்து வர வேண்டும், இது தான் எனது நோக்கம், இந்தப் பயணத்தின் வழியே அவர்கள் இந்தியாவை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும், அப்படி செய்தால் அதன்பிறகு கிராமம் மேம்படும், கூடவே அவர்களுக்குள் சண்டை சச்ரவுகள் வராது, அதற்காகவே இந்த ஏற்பாடினைச் செய்ய விரும்புகிறேன்

ரயிலில் மூன்றாம் வகுப்புப் பயணம் மேற்கொள்வதற்கு வசதியாக ஒரு தனிப்பெட்டியை ஒதுக்கித் தர முடிந்தால் அதற்கான மொத்த செலவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இது என்னுடைய நெடுநாளைய கனவு, இதை நீங்கள் தான் நிறைவேற்ற வேண்டும்.

ரயில்வே துறையின் அதிகாரி இந்த விசித்திரமான கோரிக்கையை தான் நிறைவேற்றி வைப்பதாகவும் அதற்கான பணத்தை கட்டும்படியாக சொல்லிவிட்டு, இவர்களை யார் வழிநடத்துவார்கள், யாராவது விபரங்களை எடுத்துச் சொல்லாவிட்டால் கிராம மக்களால் எதையும் புரிந்து கொள்ள முடியாதே என்று கேட்கிறார் .

அதற்கு ஸ்ரீமதி சென் கல்கத்தாவில் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பள்ளிஆசிரியர் இருக்கிறார், அவர் கிராமவாசிகளுடன் இணைந்து பயணம் செய்து இந்தியாவை அறிமுகம் செய்து வைப்பார் என்றார்

அதன்படியே பயண ஏற்பாடு முடிவாகிறது, ஆனால் எதிர்பாராமல் ஸ்ரீமதி சென் இறந்து போய்விடுகிறார், அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற கிராமம் முன் வருகிறது.

ஒட்டுமொத்த கிராமத்தையும் ஒரு ரயில் பெட்டியில் ஏற்றிக் கொண்டு போக முடியாது என்பதால் நாற்பது பேர் பயணத்திற்காகத் தேர்வு செய்யப்படுகிறார்கள், அந்த நாற்பது பேருடன் ஒரு உள்ளுர் சமையல்காரன் சேர்த்துக் கொள்ளப்படுகிறார், காரணம் உள்ளுர் முறைப்படி ரயிலிலே சமைத்து சாப்பிடுவதாக இருந்தால் மட்டுமே பயணம் வர முடியும் என்று அத்தனை கிராமவாசிகளும் ஒரே குரலில் சொல்கிறார்கள், இவர்களுடன் ஒரளவு ஆங்கிலம் தெரிந்த ஒரு மொழிபெயர்ப்பாளர், மற்றும் வைத்தியம் அறிந்த பெண் ஆகியோரும் பயணம் செய்யத் துவங்குகிறார்கள்

பயணம் குறித்த கற்பனையும் பயமுமாக முதல் அத்தியாயம் துவங்குகிறது, அவர்களுக்கான மூன்றாம் வகுப்பு டிக்கெட் இருக்கிறது, அதை வாங்கிக் கொண்டு அவர்களாக கல்கத்தா போக வேண்டும், அங்கே தான் பள்ளி ஆசிரியர் அவர்களுடன் இணைந்து கொள்வார் என்று அறிவிக்கபடுகிறது, ரயில் டிக்கெட்டை எப்படி பத்திரமாக வைத்துக் கொள்வது என்பதில் குழப்பம் துவங்குகிறது,

கல்கத்தாவில் போய் இறங்கி டிராமில் போனால் பள்ளி ஆசிரியரை சந்தித்துவிடலாம், ஹௌரா பாலத்தில் நடந்து போனால் அவர்கள் வழிதப்பிவிடுவார்கள் என்று ஆலோசனை சொல்கிறார் ரயில்வே ஊழியர்

எவ்வளவு தூரமாக இருந்தாலும் நடப்பது தான் எங்கள் வழக்கம், டிராம்கிராம் எல்லாம் வேண்டாம் என்று கிராம மக்கள் கல்கத்தா போய் இறங்குகிறார்கள்,

நகரம் ஒரே குப்பையும் தூசியுமாக உள்ளது. அதைக்கண்ட ஒரு பெண், சே, கையில் விளக்குமாறைக் கொண்டுவரமால் போய்விட்டேனே, இல்லாவிட்டால் தெருவைச் சுத்தம் செய்திருக்கலாமே என்று ஆதங்கப்படுகிறார்,

ஏன் இந்த ஊரில் அசுத்தங்களைப் பற்றி யாருமே கவலைப்படுவதில்லை, அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க் கொண்டேயிருக்கிறார்களே என்று திகைப்பாக இருக்கிறது,

அதைவிட சாலையோர நடைபாதைகளில் குடியிருப்பவர்களைக் கண்டு ஏன் இவர்களுக்கு வீடு இல்லை என்று விசாரிக்கிறார்கள், நடைபாதை தான் வீடு என்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை,

அவர்கள் நகரம் என்பதை முதன்முறையாக எதிர்கொள்கிறார்கள், அதன் நெருக்கடி, பரபரப்பு, பணம் மதிப்பிலாமல் போகும் விதம், மனித உறவுகள் அந்நியப்பட்டு போனதை கண் கூடாகக் காண்கிறார்கள், ஆனால் இவை எல்லாம் தாண்டி மனிதர்கள் நேசமிக்கவர்கள் என்றே கிராமவாசிகள் நினைக்கிறார்கள், பரிவோடு நடந்து கொள்கிறார்கள்

ரயில்வே துறை அவர்களை மந்தைகளைப் போல மரியாதையின்றி நடத்துகிறது, பலரும் ,இப்பயணம் காசிற்குப் பிடித்த தெண்டம், வீண்வேலை என்று கேலி செய்கிறார்கள், கிராமவாசிகள் அந்தக் கேலியைப் பொருட்படுத்துவதேயில்லை,

ஆசிரியர் அவர்களுடன் இணைந்து கொள்கிறார், இந்தியப்பயணம் துவங்குகிறது, குழந்தையைத் தொட்டிலில் போட்டு தாலாட்டுவதை போல ரயில் தங்களை தாலாட்டுகிறது என்று ஒரு கிராமத்துப்பெண் மிகவும் ரசித்து அனுபவிக்கிறார், இன்னொருவருக்கோ ரயில்வேகம் பயமுறுத்துவதாக உள்ளது, உள்ளுர் சமையல்காரனை கொண்டு சமைத்த உணவை சாப்பிட்டு அவர்கள் கோழித்தூக்கம் தூங்குகிறார்கள்

பயணத்தின் போது ஒரு இடத்தில் தங்கள் வழிகாட்டியிடம் சுற்றுலா பயணி என்பது யார் என ஒரு கிராமவாசி கேட்கிறார்,

அதற்கு கையில் பணம் வைத்துக் கொண்டு பொழுது போக்குவதற்காக ஊர் ஊராகச் சுற்றியலைபவரே சுற்றுலா பயணி எனப் பதில் சொல்கிறார் வழிகாட்டி,

பணத்தை ஊர் சுற்றுவதற்காகவே சம்பாதிக்கின்ற ஆள்கள் இருக்கிறார்களா என்று வியப்போடு கேட்கிறார் கிராமவாசி,

ஆமாம் நிறைய வெளிநாட்டவர்கள் இப்படி சுற்றுலா வருவார்கள் என்று சொல்கிறார்

சுற்றுலா பயணிகள் என்ன செய்வார்கள் என்று கிராமவாசி கேட்டதற்கு, தனக்குப் பிடித்தமானதை புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள் என்று வழிகாட்டி பதில் சொல்கிறார்,

புகைப்படம் எடுப்பதன் வழியே ஒன்றை எப்படிப் புரிந்து கொள்ள முடியும், அதற்காக ஒருவன் இவ்வளவு தூரம் பயணம் செய்வது முட்டாள்தனமாகயில்லையா என்று கேட்கிறார் இன்னொரு கிராமவாசி,

இப்படி பயணம் அவர்களின் மனதில் நிறையக் கேள்விகளை உருவாக்குகிறது, அதற்கான பதிலை நிறைய நேரங்களில் அவர்கள் அனுபவித்து அறிந்து கொள்கிறார்கள்,

புத்தகமெங்குமுள்ள அவர்களின் கேள்விகள் மிக முக்கியமானவை,

இந்தியாவை வெள்ளையர்கள் ஆண்டார்கள் என்று வழிகாட்டி கூறும்போது ஒரு கிராமவாசி இந்தியர்களை விட அதிக வெள்ளைகாரர்கள் இந்தியாவில் இருந்தார்களா என்று சந்தேகத்துடன் கேட்கிறார்,

இல்லை பத்து சதவீதம் கூட கிடையாது என்று வழிகாட்டி சொல்கிறார்,

நம்மை விட எண்ணிக்கையில் குறைவானவர்கள் நம்மை ஆண்டது எப்படி, ஏன் மக்கள் அதை அனுமதித்தார்கள் என்று குழப்பத்துடன் கேட்கிறார் விவசாயி, அது போலவே தன் குடும்பத்தை இங்கிலாந்து விட்டுவிட்டு ஏன் வெள்ளைகாரன் இந்தியா வந்தான், மந்திரிகள் மற்றும் பதவியில் இருப்பவர்கள் ஏன் சாமான்ய மக்களை சந்திப்பதேயில்லை என்று கிராமவாசிகள் கேட்கிறார்கள்,

பயணம் இந்தியாவின் கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் அவர்களுக்கு ஒருங்கே புரிய வைக்கிறது, கண்முன்னே காணும் இந்தியா ஒரு விசித்திரம் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்கிறார்கள்,

வங்காளியான நாம் தான் இந்தியாவில் உயர்வானர்கள் என்றிருந்தோம், அதற்கு வெளியே இவ்வளவு மக்கள் உயர்வாகவும் அமைதியாகவும் வாழ்கிறார்கள், என்றால் வங்காளிகள் தங்களைப் பெருமை பேசிக் கொண்டது வெறும் சுயதம்பட்டம் தானா என்று கிராமவாசி கேட்பது, பயணம் அவரை மாற்றியிருப்பதன் அடையாளமாகவே உள்ளது,

பாதி பயணத்திற்குள் சமையல்காரன் போய்விடுகிறான், வெளிஉணவை ஏற்றுக்கொள்ள மறுத்து பட்டினி கிடக்கிறார்கள், முடிவில் வங்காளச் சமையல் அறிந்த பெண்மணியைத் தேடிப்பிடித்து மாற்று ஏற்பாடு செய்கிறார்கள், ஆனால் வேறுவழியில்லை என்ற நிலை உருவான போது அவர்களின் உணவுப் பழக்கம் மாற ஆரம்பிக்கிறது, பழகிய சாப்பாடு பயணத்தின் போது ஒரு மனிதனை எவ்வளவு படுத்தி எடுக்கும் என்பதை அழகாக விவரித்திருக்கிறார்கள்,

அது போலவே பயணத்தில் நோய்மையுறுவது, திடீரென ஒருவருக்கு குளிரில் அவதிப்பட்டு நுரையீரலில் சுவாச அழற்றி உருவாகிறது, நிறையப் பேருக்கு கைகால் வலி உருவாகிறது, வயிற்றுஉபாதைகள் ஏற்படுகின்றன, இதற்காக உடனடி மருத்துவ சிகிட்சை தேவைப்படுகிறது, அதற்காக மருத்துவரைத் தேடியலைகிறார்கள், இந்த நிலையில் பயணத்தை முடித்துவிடலாமா என்ற யோசனை கூட எழுகிறது, ஆனால் பயணம் எக்காரணம் கெர்ண்டும் தடைப்படக்கூடாது என்று மருந்து சாப்பிட்டபடியே பயணம் மேற்கொள்கிறார்கள்

ரயிலில் ஸ்ரீமதிசென்னின் புகைப்படத்திற்கு தினமும் பூ போட்டு வணங்குகிறார்கள், கட்டுப்பெட்டியாக வீட்டிற்குள் அடைந்து கிடந்த பெண்களின் இயல்பு பயணத்தில் உருமாறுகிறது, தங்களுக்குள் இருந்த பேதம் கரைந்து போய் தாங்கள் அனைவரும் ஒரே ஊர் என்பதை அவர்கள் உணர்கிறார்கள்,

கோவில்கள், கலைநிகழ்ச்சிகள், வரலாற்றுபுகழ்மிக்க இடங்கள், வயல் வெளிகள், தங்களை போன்ற விவசாய கிராமங்கள், சிறியதும் பெரியதுமான நகரங்கள் என்று முடிவில்லாமல் சுற்றிய இவர்கள் கொச்சி வழியாக கன்யாகுமரிக்கு வருகிறார்கள், அங்கிருந்து மதுரை, மகாபலிபுரம் என்று சுற்றி ஒரிசா போய்விடுகிறார்கள்

தங்களது கிராமத்தில் இருந்து கிளம்பிய போது இருந்த அவர்களின் உலக அறிவு மெல்ல விரிந்து தங்களைத் தானே வழிநடத்திக் கொள்கிறார்கள், நெருக்கடிகளை எதிர்கொண்டு தானே சமாளித்து மீள்கிறார்கள், சகலருக்கும் அன்பைப் பகிர்ந்து தருகிறார்கள்,

இந்தியாவின் நீண்ட வரலாற்றையும் பண்பாட்டையும் எழுச்சிவீழ்ச்சியையும் அறிந்து கொள்ளும் போது தங்களின் வாழ்க்கை என்பது வானில் ஒளிர்ந்து மறையும் சிறிய வெளிச்சம் மட்டுமே என்பதை புரிந்து கொள்கிறார்கள்,

பயணம் அவர்களுக்கு நிறைய ஆச்சரியங்களை அளிக்கிறது, நிறையப் பாடங்களை கற்றுத்தருகிறது, ரயிலை அவர்கள் நேசிக்கிறார்கள். சொந்த வீடு போல உணர ஆரம்பிக்கிறார்கள்

ரயில் வெறும் வாகனம் இல்லை, அது இந்தியாவை ஒன்றிணைக்கும் ஒரு நீள்கரம், கிராமவாசிகள் மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்வதன் வழியே புழுதிக்காற்றும் வெக்கையும் தாகமுமாக இந்தியாவை அதன் உண்மையான ரூபத்தில் கண்டடைகிறார்கள், அது ஒரு மகத்தான தரிசனம், வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத நிகழ்வு,

இந்தியாவினை முழுமையாகக் காண்பதற்கு ஒருவனுக்கு அவனது வாழ்நாள் போதாது, இந்தியாவில் வாழ்பவர்கள் ஒருமுறையாவது அத்தனை முக்கிய நதிகளையும் கண்டுவிட வேண்டும், நதி வழி தான் நகரங்களும் இருக்கின்றன, ஆகவே நதிகளையும் நகரங்களையும் இணைத்தே பயணம் மேற்கொள்ளலாம்,

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், பௌத்தம், சமணம், சீக்கியம் சார்ந்த முக்கிய இடங்கள், புகழ்பெற்ற கோவில்கள், புனிதர்களின் இடங்கள், அடர்ந்த வனங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள், தேயிலை காபி தோட்டங்கள், கோதுமை வயல்கள், மலைநகரங்கள், கானுயிர் வசிப்பிடங்கள், மிகப்பெரிய ஏரிகள், ஆறுகள், பாலைநிலம், சிறியதும் பெரியதுமான நகரங்கள், இசை, நடனம், ஒவியம், சிற்பக்கலை சார்ந்த மையங்கள், பிரசித்திபெற்ற கல்விநிலையங்கள், அறிவுத்துறை சார்ந்த ஆய்விடங்கள், இயற்கையோடு இணைந்த கிராமங்கள், என்று சுற்றிக்காண்பதற்கு இந்தியாவில் எவ்வளவோ இருக்கின்றன, அதில் பாதியை ஒருவனால் காணமுடிந்தால் அவன் பாக்கியவான்,

இந்தப் புத்தகத்தை வாசிக்கையில் நாடோடியாக நான் சுற்றியலைந்த இந்தியப் பயண நினைவுகள் மேலோங்கி வந்து நெகிழ்ச்சியுறச் செய்தது, இதே அனுபவத்தை, அவமானத்தை, சந்தோஷத்தை நானும் அடைந்திருக்கிறேன் என்று நிறைய இடங்களில் பக்கத்தை மூடிவைத்துவிட்டு கண்களை மூடி கடந்தகாலத்தை நினைத்துக் கொண்டேயிருந்தேன்,

பயணம் முழுவதும் கிராமவாசிகள் அவர்கள் உடைகளுக்காகவும், எளிய தோற்றத்திற்காகவும் பிச்சைகாரர்கள் என்றே படித்தவர்களால் கேலி செய்யப்படுகிறார்கள், அவர்கள் அதைக் கண்டு கொள்வதில்லை, உண்மையில் பயணம் நமது அடையாளத்தை உதறச்செய்துவிடுகிறது, நம்மை வெறுப்பவனைக் கூட நேசிக்க செய்யும் மனதை தந்துவிடுகிறது, பயணியாக இருப்பது ஒரு சுகம், அபூர்வநிலை,

சாதாரணக் கூலி வேலை செய்யும் ஒரு வெள்ளைகாரன் இந்தியாவிற்கு பயணியாக வரும்போது அவனுக்கு நாம் கொடுக்கும் மரியாதையை. இங்குள்ள கிராமவாசிகள் பயணம் செய்யும் நாம் தருவதேயில்லை, ஏன் இந்த வேறுபாடு, அலட்சியம்.

அவமதிப்பும், எதிர்பாராமையும், கைவிடப்படலும் பயணத்தின் இணைபிரியாத தோழமைகள், அதைத் தவிர்த்து ஒருவனால் பயணம் மேற்கொள்ளவே முடியாது

இந்த நூலில் கிராமவாசிகள் இந்தியாவைச் சுற்றிபார்த்துவிட்டு தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பும் அத்தியாயம் மிகுந்த உணர்ச்சிமயமாக விவரிக்கபட்டுள்ளது

முற்றிலும் மனம் மாறியவர்களாக கிராமவாசிகள் நடந்து கொள்கிறார்கள், உலகம் கற்றுத்தந்த பாடத்தை தனது கிராமத்தில் உடனே நடைமுறைப் படுத்துகிறார்கள். ஸ்ரீமதிசென்னின் கனவு நனவாகிறது,

இந்த நூலெங்கும் ஆதாரக்குரல்போல ஒலிப்பது மனிதநம்பிக்கை குறித்த ஹீதர் வுட்டின் கருத்துகளே,

ஹீதர் வுட் சொல்கிறார் ,மனிதனின் உண்மையான சந்தோஷம் என்பது குடும்ப விசேசமோ, அல்லது நிறைய சம்பாதிப்பதோ இல்லை, அந்த மகிழ்ச்சிகள் தற்காலிகமானவை, கடந்து போய்விடக்கூடியவை, உண்மையான சந்தோஷம், எதிர்வரும் தலைமுறையான நமது பிள்ளைகள் நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளுமாறு செய்வதே, அதை நாமே உருவாக்க வேண்டும்

சகல கஷ்டங்களையும் கடந்து வாழ்க்கை இனிமையானது என்று அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும், அப்படியான முன்மாதிரி வாழ்க்கையை நாம் வாழ்ந்து காட்டினால் மட்டுமே நம்முடைய பிள்ளைகள் அதைக் கடைப்பிடிப்பார்கள், ஆகவே நம்பிக்கை தான் மனிதனின் ஆதாரசக்தி, அதை உருவாக்கி வலுப்படுத்த வேண்டும்

நகரம் மனிதர்களின் பேராசையால் நிரம்பியிருக்கிறது, கிராமமோ புறக்கணிக்கபட்ட நிலையில் கூட உறுதியான நம்பிக்கையைத் தன் பக்கம் வைத்திருக்கிறது, ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள், கிராமத்தின் அழியாத நம்பிக்கைகள் கைவிடப்பட்டால் இந்தியாவிற்கு எதிர்காலமே இருக்காது

திறந்த மனதுடன், எளிமையுடன், நேசத்துடன், பேராசையும் வன்முறையும் இன்றி, அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து தர வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமை, அந்தக் கடமைக்கு நம்மைத் தயார் செய்வதற்கே இது போன்ற பயணங்கள் தேவைப்படுகிறது

ஹீதர் வுட்டின் இந்த எளிய வாசகங்கள் உண்மையானவை,

இந்தியாவை ஒருமுறைச் சுற்றிவந்தவன் அதன்பிறகு வாழ்வின் மீது மிகுந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டவனாகவே இருப்பான்,

நிலம் கற்றுத்தரும் பாடம் மகத்தானது, ஒரு போதும் மறக்கமுடியாதது

அலைந்து பாருங்கள் இந்தியா எவ்வளவு பெரியது, வளமையானது, உறுதியானது, என்பது புரியும்.

Tuesday, October 23, 2012

தவறிய கொலுசு - மனுஷ்ய புத்திரன்

கடையில் இருக்கும் கொலுசுகள்
ஒரு விலை கேட்டு காத்திருக்கின்றன

காலில் கிடக்கும் கொலுசுகள்
ஒரு முத்தம் கேட்டு காத்திருக்கின்றன

இதோ தெருவில் கிடக்கிறது
ஒரு கொலுசு
யாருடைய வழியிலோ
யாரையோ நினைத்துக்கொண்டு

Friday, October 19, 2012

ஒரு காதலை தெரிவிக்கும்போது - மனுஷ்ய புத்திரன்

ஒரு சிறு பெண்
தயங்கித் தயங்கி

தன் காதலை தெரிவிக்கிறாள்

அது அவள் முதல் காதலாக இருக்கவேண்டும்
அல்லது ஒவ்வொரு காதலையும்

தெரிவிக்கும்போதும் அவள் அவ்வளவு

குழப்பமடைபவளாக இருக்க வேண்டும்
உண்மையிலேயே அது
புத்தம் புதியதாக இருந்தது
அப்போதுதான் உறையிலிருந்து
பிரிக்கபட்ட ஆடையின் வாசனையை
அ து நினைவூட்டுகிறது

அவளுக்கு ஒரு காதலை
எப்படித் தெரிவிக்கவேண்டும்
என்பதுகூட தெரிந்திருக்கவில்லை
அப்போது அவள் வீட்டைப் பற்றி பேசினாள்
அம்மாவைப்பற்றி பேசினாள்
பக்கத்துவீட்டு குழந்தைகளைப் பற்றி பேசினாள்

ஒரு அபத்தமான கனவைப் பற்றி பேசினாள்
அவள் விரும்பியதற்கு
நேர் எதிரானதையே
அவள் பேசினாள்
அது தவறாகவே புரிந்துகொள்ளப்படும்என்று
அவள் அஞ்சினாள்
ஆனால் அது சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டபோது
மிகவும் வியப்படைகிறாள்

தற்செயலாக திறந்துவிட்ட
ஒரு அறையின் எதிர்பாராத காட்சியில்
அவள் அப்படியே நின்றுகொண்டிருக்கிறாள்
அதைச் சொல்லும்போது அவளுக்கு
அவள் ஒத்திகை பார்த்த எதுவுமே
நினைவுக்கு வரவில்லை
அதை ஒரு உணர்ச்சிகரமானநாடகமாக

கையாளவே அவள் விரும்பினாள்
ஆனால் ஒரு நகைச்சுவைக் காட்சியைப்போல
அதைக் கையாண்டாள்
ஒரு காதலைத் தெரிவிப்பது
இன்னொரு மனிதனை முழுமையாக
சந்திப்பது என்பது அவளுக்குத் தெரியாது
அவள் அதை முதலில்
ஒரு சுவாரசியமான விளையாட்டாகவே தொடங்கினாள்

ஆனால் அந்தச் சந்திப்புநீணடதாக இருந்தது
ஒருவரை முழுமையா சந்திப்பது
அவ்வளவு பாரமானது என்று
அவள் யோசித்ததே இல்லை
அவள் திரும்பிப்போக விரும்பினாள்
அவளுக்கு அவளாக மட்டும் கொஞ்சம்
மூச்சுவிட வேண்டும்போல இருந்தது

ஆனால் அந்த சந்திப்புமுடிவடைவதாகவே இல்லை

அவள்
எல்லாவற்றையும்முழுமையாக
நம்பவிரும்பினாள்
எல்லாவற்றையும் முழுமையாக
சந்தேகிக்க விரும்பினாள்
தனக்கு யோசிக்க
வேறு விஷயஙகளே இல்லையாஎன்று
அவளுக்கு எரிச்சலாக இருந்தது
ஆனால் அவள் அதையே யோசித்தாள்

ஒரு சிறுபெண்
தனது காதலை தெரிவிக்கும்போது

அவ்வளவு நிராயுதபாணியாய் இருக்கிறாள்
இந்த உலகத்தின் மீது வைக்கும்
கடைசி நம்பிகையைப்போல
கருணையின்மைகளுக்கு முன்னே
ஒரு கடைசி பிரார்த்தனையைப் போல
அவ்வளவு பிரகாசமாக இருக்கிறது
அது


Wednesday, October 10, 2012

காத்திருத்தல் - பேயோன் கவிதை

கடுத்த கால்கள் நின்றிருக்க
பேருந்து நிறுத்தத்தில்
வெகுநேரமாய் உனதிருப்பு.
உன்னுடன் நானிருக்கும்
கணங்களை நீட்டிக்கிறது
உன் காத்திருத்தல்.
வலிக்காய் நீ
கால் மாற்றிக் கால் மாற்றி
நிற்பதைப் பார்க்க வருத்தமே
எனினும் அதுவும்
கண்ணுக்கோர் களிநடனம்
(என் தோட்டத்து மரவட்டை போல்
இன்னும் சில கால்களுனக்கு
வாய்த்திருக்கலாம்).
வரட்டும் நிதானமாய்ப் பேருந்து
உன் வளைவுகள்
மயிர்க்கற்றைகளின் பறத்தல்
மனப்பாடம் ஆகட்டும் எனக்கு.
அது வரை காத்திரு கண்ணே,
உன் கால்கள் ஒன்றும்
முறிந்துவிடாது.

Monday, October 8, 2012

இயற்கை

வெண்ணிலா வானிலே உலா வரக் கண்டேன் !
நதியோரம் நாணல் வளைந்தாட கண்டேன் !
முழுமதி முகமது நீரினிலே நீந்த கண்டேன் !
வீசுகின்ற தென்றல் என் மேனி தழுவ நின்றேன் !
குட்டி முயலொன்று அங்கே துள்ளி ஓட கண்டேன் !
அது குறும்புடன் விளையாட கண்டேன் !
விபரீதம் புரியாமல் மெய் மறந்து நின்றேன் !
ஒளிந்திறந்த ஓநாய் ஓடி வர கண்டேன் !
வெள்ளை முயல் கொள்ளை போக கண்டேன் !
விழித்தெழுந்த நான் வியர்த்திருந்தேன் !
ஓநாய் என் கண் முன் ஒரு நொடி வந்து போனது !
எனை அறியாமல் என் கை 
அருகில் உறங்கிக்கொண்டிருந்த 
என் குழந்தையின் தலை வருடியது !

Saturday, September 29, 2012

மத்யமன்


மத்யமன்
(சுஜாதாவின் மத்யமன் குறிப்புகளில் கவரப்பட்டு முயற்சித்தது)

பெரும்பான்மை நம்மில் நானும்
ஒருவன்...
மத்யமன்.

என் கவிதைகள் பிள்ளையார் சுழி தாண்டுவதில்லை

என் காதல் எப்போழுதும் சொல்லப்பட்டதில்லை

மழை எனக்கு எரிச்சல்
நிலவை சமீபத்தில் பார்ததில்லை

என் கனவுகள் அடுத்த சம்பள நாளைத் தாண்டியதில்லை..

என் மிகப் பெரிய சமுதாயக் கோவம்
போன வாரம் புது படத்திற்க்கு
வாங்கிய பிளாக் டிக்கெட்

செய்தித்தாளில் என்னை கவர்வது
இலவச பக்கங்களே...

அன்னா ஹசாரேயும் அணு உலையும்
எனக்கு சுவாரசியம் தருவதில்லை

என் தேச பக்தி கிரிக்கெட் வரை மட்டுமே

பெரும்பான்மை நம்மில் நானும்
ஒருவன்...
மத்யமன்.

இத்தணை குணத்திலும்

எங்கேயோ ஒரு சாலை விபத்தில்
யாரோ சிந்திய இரத்தம்
என் கண்ணில் ஏன் துளிர்த்தது ?

என்னுள் உறங்கும் உத்தமனை
என்க்கு காட்டிடவா?








Thursday, September 13, 2012

எழுத நினைத்த கவிதை

இதயத்தை
வெகுநாட்களாக
ஒரு மெல்லிய கவிதை
எழுத சொல்லி உறுத்தியது.

ஒருநாள்
அமைதியாக உட்கார்ந்து
வார்த்தைகளை
தேடிதேடி பொருத்தினேன்.

வெள்ளை காகிதத்தில்
ஒரு அழகிய கவிதை
முளைத்து வந்து
என்னை பார்த்து சிரித்தது.

ஆனால் . . .
ஆனால் . . . .
நான் நினைத்த கவிதை
இதுவல்ல.

பாவம்.
இதயத்தில் முளைத்த
அந்த மெல்லிய கவிதை
இதயத்திற்குள்ளேயே
ஒரு ஓரத்தில்
சுழன்று கொண்டே...

Tuesday, September 11, 2012

ஆத்மார்த்தியின் 108 காதல் கவிதைகள் தொகுப்புக்குத் தந்த முன்னுரை - பாரதி கிருஷ்ணகுமார்

உலகின் எந்த மொழியிலும் இன்னும் எவராலும் எழுதிமுடிக்கப்படாத
பேருணர்வே காதல். எல்லாக் காலத்திலும்,எல்லா மொழிக்கும் எழுதுவதற்குக் குறைவின்றி அள்ளி, அள்ளித்தரும் அருட்கொடையும் காதல்தான்.
காதலை "எழுதிமுடித்த" மொழிகள்தான் காணாமல்போன மொழிகளின் பட்டியலில்,இடம்பெற்ற மொழிகள் என்பதை, எந்த ஆய்வாளனின் உதவியுமின்றி அறிந்துகொள்ளுதல் இயலும்.

நீதி நூல்களின் வரிசையில் எப்போதும் தனித்த முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கும்,திருக்குறளில்,வள்ளுவன் காமத்துப் பாலைச் சேர்த்துப் பாடியதன் பின்னே இருக்கும் நீதி அதுதான். தன் படைப்புக்கும் சாகாவரம் வேண்டித்தான் காமத்துப்பாலையும் வள்ளுவன் எழுதினான்.

இன்றைக்கும் "விலங்கின்" பிரிவுகளில் ஒன்றாகத்தான் நம்மை விஞ்ஞானம் வகைப்படுத்துகிறது.விஞ்ஞானத்தின் இந்த விபரீதமான பகுப்பாய்வைத் தகர்த்து நாம் மனிதர்களாக மனுஷிகளாகத் தரம் 'உயர்ந்தது' காதல் நமக்குத் தந்த உயர்வினாலே தான்.விலங்கிற்குப் பிறந்து விலங்காகப் பிறந்து, விலங்கெனவே வாழ்ந்து, விலங்காகவே மடிந்து போய் விடுகிற நமது வாழ்வில் நமக்கு மனிதத்தன்மை தரும் பேருணர்வு காதல் மட்டுமே.
இந்தப் "பேருணர்விலே" இருந்துதான் மனிதன் இதர அனைத்து வகையான அறங்களையும்,பண்புகளையும் குணநலங்களையும் ஒழுக்கங்களையும்
உருவாக்கி இருக்கிறான்.காதலில் இருந்து தான் தனக்கான அனைத்து மேன்மைகளையும் ஆற்றல்களையும் மனிதன் உருவாக்க முடியும். 'உயிர்ப்பிக்கும்' உறவாக காதல் மட்டுமே களத்தில் இருக்கிறது. மற்றதெல்லாம் காதல் பிறப்பித்த,புலப்படுத்திய உப-பொருட்களேயன்றி வேறல்ல.
இராமன் மனிதனாகப் பிறந்த கடவுளா?அல்லது கடவுள் மனித உருவில் வந்தாரா என்பதையெல்லாம் பட்டிமண்டபங்களின் முன்னாள் பெருச்சாளிகளுக்கும், இந்நாள் சுண்டெலிகளுக்கும் பேசுபொருளாக விட்டுவிடலாம். ராமன் அமரத் தன்மை பெற்றது மிதிலையில் சீதையைக் கண்டு, காதல் கொண்டபிறகு தான்.பத்தாயிரம் பேர் சுமந்து வந்த, யாராலும் எடுத்து நிறுத்த இயலாத சிவதனுசை, இராமன் மட்டும் எப்படி முறித்தான்?. "எடுத்தது கண்டார்;இற்றது கேட்டார்" என்று கூடியிருந்த எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திவிடுகிற விரைவோடு, வலிமையோடு இராமனால் மட்டும் எப்படி முறித்தெறிய முடிந்தது..?
அவன் கடவுள் மனிதன் என்பதெல்லாம் இதற்குப் பொருத்தமான விடைகளே அல்ல;சுயம்வரத்திற்கு வந்தவர்களிலேயே சீதையைக் கண்டதும் காதல் கொண்டதும் ராமன் ஒருவனே. அவளும் கண்டு, காதல் கொண்டதால் தான் அத்தகைய ஆற்றல் அவனுக்கு வாய்த்தது. மண்ணில் குமரர்க்கு மாமலையும் கடுகாகும் அற்புதத்தை எது தருகிறதோ, அது காதல், அதுவே காதல்.
விசுவாமித்திரன் வேறு பாதையில் அழைத்துப் போயிருந்தால் கதையும் வேறு பாதைக்குத் தான் போய் இருக்கும்.உலகின் வேறு எந்த மொழி ராமாயணப் பிரதியிலும் சொல்லாது விட்டதை தமிழில் தான் மட்டுமே பாடி "கவிச்சக்கரவர்த்தி" ஆனான் கம்பன்.

ஏகப்பட்ட 'காதல்' தொகுப்புகள் தமிழில் வந்துவிட்டன. மிகப் பெரும்பான்மையான முதல் தொகுப்புகள் 'காதலை' மையம் கொண்டே
உருவாகி இருக்கின்றன என்ற போதும் என் வாசிப்பின் எல்லைக்குள் மீராவின் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் என்னும் தொகுப்பும் பரிணாமனின் காதல் முதல் காதல் வரை என்னும் தொகுப்புமே மனம் கவர்ந்தவைகளாக இருந்திருக்கின்றன. இந்தச் சிறிய பட்டியலில் இப்போது மூன்றாவதாக ஆத்மார்த்தியின் "108" காதல் கவிதைகள்" என்னும் இந்தத் தொகுப்பையும் நான் சேர்த்துக் கொண்டேன்.
108 என்கிற எண் தன்னை வசீகரிப்பதாகத் துவங்குகிறார் ஆத்மார்த்தி. இந்துச்சமய மரபில், பெரிதும் புனிதமாக்கப்பட்டுவிட்ட எண் 108. அர்ச்சனை
ஆராதனை தியானம் திருத்தலங்கள் என்று விதம்விதமாய் அந்த எண்ணை உருவேற்றி வைத்திருக்கிறது சமயம்.இத்தனை காலம் சமயம் உருவேற்றிய எண்ணுக்கு, இந்தத் தொகுப்பால் மேலும் வசீகரம் கூடுகிறது.
சாதாரண மனிதர்களின் மனதில் கேட்டவுடன்,வழிபாட்டு உணர்ச்சியை உண்டாக்குகிற எண் 108.அந்த எண்ணைத் தேர்வு செய்ததன் மூலம்,
காதலின் மீதான தனது வழிபாட்டுணர்வை கவிஞன் சொல்லாமல் சொல்லுகிறான். உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்களை அழைப்பதற்கு அந்த எண் பயன்படுகிறதென்றால், காதலைப் பாட மிகப் பொருத்தமான தேர்வாக அந்த எண் துலங்குகிறது.

இந்த எண்ணைத் தேர்வு செய்ததன் மூலம்,சமயம் உருவாக்கிய புனிதத்தை,நூற்றாண்டுகளாக உருவாக்கிப் பாதுகாத்த புனிதத்தை,சட்டென்று
காதலுக்குக் கைமாற்றித் தந்ததற்காக "கடவுள்" ,ஆத்மார்த்திக்கு நன்றி சொல்லக்கூடும். வழக்கம் போலவே, ஆஷாடபூதிகள் எதிர்க்கவும் கூடும். எது நடந்தாலென்ன?எல்லாவற்றையும் காதலும்,கவிதையும் பார்த்துக் கொள்ளும்.

"காதல் மிக அற்பமானது; அது பிறப்பதற்கும் அழிவதற்கும் அற்பக் காரணங்களே போதுமானது ஆனால் அது மேன்மையுறுவதற்கு சம்மந்தப்பட்டவர்களின் வேறு சில குண நலன்களே காரணமாய் இருக்கின்றன" என்று தனது நாவல் ஒன்றின் முன்னுரையைத் துவக்கி இருப்பார் திரு.ஜெயகாந்தன். அத்தகைய சிறப்புடைய குணநலன்கள் குறித்து
அதிகம் பேசுவது இத்தொகுப்பின் தனிச்சிறப்பு.
எப்போதுமே கவிதைகளின் மீது தீராத காதல் கொண்ட, படைப்பு மனம் மிக்கவர்களுக்கு,மேலும் கிளர்ச்சியூட்டுகின்றன காதல் கவிதைகள். இந்தத் தொகுப்பில் புதிய சொற்சேர்க்கைகளை உருவாக்கிப் பிரயோகிப்பதிலும்,புதிய கற்பனை மொட்டுக்களைப் பிரயாசையின்றி மலர்த்தி விடுவதிலும்,வெற்றி கண்டு மகிழ்ச்சி கொள்ள வைக்கிறார் ஆத்மார்த்தி. மொழியின் சாகசம் நிறைந்த பாதைகளின் வழியே,காதலைக் கைப் பிடித்து அழைத்துப் போவதிலும் அலுப்பற்ற பயணம் சாத்தியமாயிருக்கிறது ஆத்மார்த்திக்கு.
இந்தத் தொகுப்பு உருவாக்கும் வசீகரங்களில் மிக முக்கியமானது இதன் எளிமையும்,சிக்கனமும்.இந்தக் "கட்டுமானம்" தனித்த அழகோடிருக்கிறது.நெருக்கிக் கட்டப்பட்ட இந்த இறுக்கம் கூட இளமையின் முறுக்கேயன்றி, முதுமையின் இறுக்கமன்று; இந்த சொற்சிக்கனம்,வாசிப்பின் போதே கவிதையின் முழுப்பொருளையும் அப்போதே உணர்ந்து விடுகிற அனுபவத்தைத் தருகிறது.அது வாசிப்பில் ஒரு பரவசமான விரைவுத்தன்மையை ஏற்றுகிறது. அந்த விரைவு, இரண்டு இழைகளுக்கு இடையில், நெசவில், பாய்ந்தோடும் எறிகுழலைப் போல விரைந்தோடி, இழைகளை, தனித்த இழைகளை, இணைத்து ஆடையாக்கி விடுகிறது.

இணையத்தில் இந்தக் கவிதைகள் அன்றாடம் எழுதப்பட்டப்போது, தொடர்ந்து படிக்க இயலாது அவ்வப்போது படித்த தருணங்களிலேயே
இவைகள் என் மனம் கவர்ந்து இன்று தொகுப்பாகிக் கைகளில் கிடக்கிறது.
"வாங்கிச் செல்கிறவருக்கு
வாசிக்கத் தெரியுமோவென
ஏங்கிச்செல்லுமாம் வீணை;
மடியினில் ஏந்தி
மீட்டத் துவங்குகையில்
வழியத் தொடங்குமாம்
நாண இசை"
"காமம்" என்று தலைப்பிடப்பட்ட இந்தக் கவிதை,காமம் என்கிற சொல்லை நம் முன்னோர்கள் கையாண்ட "காதல் என்கிற முன்னைப் பழம்பொருளிலேயே எடுத்தாள்கிறது. இந்தக் கவிதை காதலுக்கும் கவிதைக்கும் பொதுவான பாடுபொருளாகப் படுகிறது எனக்கு... தன்னை எடுத்து எழுதப் புகுந்தவனிடமும் இதே ஏக்கத்துடன் காத்திருக்கிறது 'மொழி' என்றே நான் கருதுகிறேன்.மொழியும் அவளும் அறிவார்கள்... இசை எப்போதும் வாத்தியத்தில் இல்லை; அது வாசிக்கிறவன் இடத்திலே தான் இருக்கிறதென்பதை." இந்தப் பேருண்மையை எளிய சொற்களில் தருகிறது இந்தக் கவிதை.
'கலவி' என்று தலைப்பிடப்பட்ட கவிதையின் உட்பொருள் மிக,மிக நுட்பமான உடலியல் உண்மையை உணர்த்துகிறது.எல்லாமும் இசைந்து இருக்கிற எல்லாமும் கலந்து இருக்கிற எல்லாமும்... எல்லாமும் இணைந்து இருக்கிற ஆகச்சிறந்த கலவி தரும் பேரின்பத்தைப் பேசுகிறது இந்தக் கவிதை.
'அறியாதவர்'களே இதனைச்சிற்றின்பம் என்று சொல்லித் தங்களைச் சிறுமைப்படுத்திக் கொண்டார்கள். அறியாதவர்களுக்கு அது சிற்றின்பம் தான். அறிந்தவர்கள் அறிவார்கள் அது பேரின்பம் என்பதையும். மழையை நிலம் புணர்ந்தது என்பதையும்.அதுதானே "செம்புலப் பெயல் நீர்".... நிலம் புணர்ந்து மழைக்குத் தன் நிறம் தருவதே கூடல்,
இந்தப் பேரின்பத்தின் அந்தரங்கத்தை, எல்லோரும் பயன்பெற மொழிகிறது இந்தக் கவிதை.மோட்சத்திற்குப் போகிற பாதையை,கோபுரத்தின் மீதேறி நின்று,ஊரைக் கூட்டிச் சொல்வதற்கு எவ்வளவு பரந்தமனம் வேண்டுமென்பதை, இப்போது உணர முடிகிறது. அந்தரங்கத்தின் நுட்பங்களையும், ரசனைக் கூர்மையையும் பகிர்ந்துகொள்வதன் மூலம் காதலை எல்லோருக்குமானதாக மாற்றி விடக் கூடும்.

எல்லோரும் காதலிக்க வேண்டுமென்பது என் கட்சி. அதனை எல்லா அழகுடனும், அற்புதத்துடனும், மனிதர்கள் நிகழ்த்த வேண்டுமென்பது என் பெருவிருப்பங்களில் ஒன்று. என் பெருவிருப்பத்தை, இத் தொகுப்பு நிறைவேற்றுவதால், இது எனக்கு உவப்பானதாக இருக்கிறது. இந்த முன்னுரை கூட ஆத்மார்த்திக்காக எழுதப்பட்டதல்ல. காதலுக்கு என எழுதப்பட்டதே. அந்த உவப்பில்,களிப்பில் என் ஆசான் மகாகவி பாரதி சொன்னதை உங்களுக்குச் சொல்கிறேன். "ஆதலினால் காதல் செய்வீர்.."

"குளத்து மீன்கள்
கடிக்கும் என்றபடி
கரையில் நின்றேன்
"பேசும்" என்று
கால் நனைத்தாய்.
இந்தக் கவிதையைப் படித்ததும் முகமறியாத அந்த மனுஷியின் மீது மதிப்புண்டாகிறது.இப்படிப் பேசுவதால் காதலிக்கப் பட்டாளா..அன்றி காதல்
வயப்பட்டதால் இப்படிப் பேசுகிறாளா என்று ஊகித்து உணரமுடியாமல் பிரமிப்புத் தட்டுகிறது. கவிதையில் உருவாக்கப்பட்ட மென்மையுணர்ச்சியும், அழகுணர்ச்சியும் மிகுந்த களிப்பூட்டுகிறது. அந்தக் கணம்,அந்தக் குளத்து மீனாகி விட வேண்டுமென்று கூடத் தோன்றுகிறது.
மேலும் மேலும் இத்தொகுப்பில் உள்ள மனம் கவர்ந்த கவிதைகளைப் பற்றி எழுதி இதை ஒரு வழமையான முன்னுரையாக மாற்றிவிட எனக்கு
விருப்பமில்லை.; காதலின் பேரின்பத்தை இந்தக் கவிதைகளை வாசித்து இன்புறுங்கள். பிரிவின் துயரத்தையும் இந்தக் கவிதைகள் உணர்த்திவிடக் கூடும்.இன்பம் துன்பம் இரண்டுமே ஒன்றாகி, ஒரு சேரத் தருவது தான் காதலின், நூதனமான தனிப் பண்பாகி இருக்கிறது. அதனாலேயே தான் நெருங்கினால் குளிர்கிற நீங்கினால் சுடுகிற நெருப்பென்று அதைச் சொன்னான் வள்ளுவப் பேராசான்.

பாரதி எழுதினான் "கல்லாய்ப் பிறந்தால் காந்தக் கல்லாய்ப் பிற; செடியாய்ப் பிறந்தால் தொட்டால் சிணுங்கிச் செடியாகப் பிற.மனிதனானால் காதல் செய்..." ஏனெனில் காதல் தான் சாதிகளை ஒழிக்க வல்லது. காதல் தான் மதங்களைக் கடக்க வல்லது.காதல் தான் எல்லாப் பேதங்களையும் எடுத்தெறியக் கூடியது.
காதல் தான் விலங்காயிருந்த நம்மை மனிதனாக்கியது.
காதல் தான் மனிதர்களாய் இருந்த நம்மை அமரனாக்கியது.
காதல் 'தன்' வயப்பட்டவனையும்,தன்னைப் பாடுகிறவனையும், தன்னை வாசிக்கிறவனையும் கூட அமரனாக்கும் ஆற்றல் கொண்டது.
அத்தகைய அமரத்தன்மை, நம் எல்லோருக்கும் வாய்க்கட்டும்.

என்றும் மாறாத அன்புடன்
பாரதி கிருஷ்ணகுமார்.
01.08.2012

.

Friday, September 7, 2012

ஒரு கவிதை உருவான கதை- இணையத்தில் சுட்டது

ஒரு கவிஞன்
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம்
அலாரம் வைத்து எழுந்துக் கொள்கிறான்

குளியலறை சென்று
குழாயில் தண்ணீர் வருகின்றதாவென்று
சரி பார்க்கின்றான்
தூக்க கலக்கத்தில் கவிதை போல
நிழலாடுகின்றது ஏதோவொன்று
தண்ணீர் ஒழுகும் ஓட்டை வாளியை பார்த்தக்கணம்
அவன் கற்பனை வடிந்து விடுகின்றது

பல்துலக்கி டிபன் சாப்பிட்டு அலுவலகம் விரைகின்றான்
பேருந்தில் நடத்துனர்
கிழித்து கொடுக்கும் பயணச்சீட்டு
அவனை கவிஞனென உணரவைக்கின்றது
பயணச்சீட்டின் பின்புறம் பேனாவால்
இரண்டு வரி எழுதுகின்றான்

அலுவலக தேநீர் இடைவெளியில்
அவன் மேலும் இரண்டு வரிகளை யோசிக்கின்றான்
மதிய இடைவெளியில்
முதல் இரண்டு வரிகளை திருத்தி அழிக்கின்றான்
அலுவலக மேலாளர் வசவிற்கு
பிறகு கழிப்பறை செல்கின்றான்.
அங்கு இரண்டு வரிகள்

இடையே பங்குச் சந்தை முதலீடு
முடிச்சூர் சாலையின் ரியல் எஸ்டேட்
மகள் பெயரில் காப்பீடு திட்டம்
மாமனார் ஊருக்கு செல்ல
தட்கலில் முன்பதிவு
மகனுக்கு கல்வி லோன்
மகளுக்கு பள்ளிகூட விண்ணப்பம்
இன்னும் பல பல வேலைகளுக்கு இடையில்
வரிகள் வளர்கின்றன

மாலை வீடு திரும்பும்போது
பத்தாவது வரி முழுமையடைகிறது
இரவு உணவிற்கு பின்னர்
குறிப்பேடு,பேனாவுடன்
தூங்கி போகும் அவன்
திடீரென படிமம்,இருண்மையென அரற்ற
யோவ் பேசாம மூடிகிட்டு தூங்கமாட்ட
மனைவி அதட்டுகிறாள்

ஒரு கவிஞன்
புரண்டு படுக்கிறான்

காலையிலிருந்து
பொறுத்து பொறுத்து பார்த்த
ஒரு கவிதை
தன்னைத்தானே எழுதிக் கொள்ள ஆரம்பிக்கின்றது

Wednesday, August 29, 2012

எழுத்தாளர் பேயோன்- என் வாட்ச்சு ஸ்லோவா போகுது

தனிமையைப் புகைத்தபடி
கால்களால் சாலை தேய்த்து
ஏதோ காரியமாய் தெருவில் போகும்
என்னை நிறுத்தி நேரம் கேட்கிறாய்

உனது நோக்கத்தைப் பொறுத்து
எனது பதில் மாறக்கூடும்
எதற்காக நேரம் கேட்கிறாயென
உன்னைக் கேட்டால் சொல்ல மாட்டாய்
நேரத்தை உள்ளபடி காட்டும்
கருவியல்ல எனது கடிகாரம்
காலத்தைவிட மெதுவாகவே ஓடுமது.

பதினொன்றென மணி சொன்னால்
அதை நீ உண்மையென நம்பிவிட சாத்தியமுள்ளது
கடிகார தாமதத்தைக் கூற விழைகையில்
உன் அவசரத்தில் நீ அதைக்
கேட்காமல் போய்விடக்கூடும்
என் பதிலால் உன் காரியம் தடைபடக்கூடும்
ஏதாவதொரு இழப்பை நீ சந்திக்கக்கூடும்

வேண்டாமினி இந்த ஊடாடல்
சகஜங்களிலிருந்து தவறவிடுதல்களுக்கு
இது இட்டுச்சென்றுவிடும்
காலத்தைச் சுமந்தலையும் கைகள்
ஆயிரமுண்டு இத்தெருவில்
அவைகளிடம் போய்க் கேள்.

Sunday, August 26, 2012

சங்கமம்

திக்கெட்டும் பணி நிமித்தம் பறந்து சென்ற ஒரு கூட்டுப்  பறவைகள்...
பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு சங்கமிக்கின்றன..
அசை போட ஆயிரம் நினைவுகளோடும்,
பகிர்ந்து கொள்ளப் பல நிகழ்வுகளோடும்.

இது என்ன வேடந்தாங்கலா !!

       -   ரமேஷின் இணையப் பக்கத்தில் இருந்த புகைப்படத்தின்  பாதிப்பு !

எதிர்பார்ப்பு

நாளை இரவு விமானத்தில் சொந்த ஊருக்குப் பயணம்
வாங்கி வரச் சொன்ன அத்தனை குரல்களையும் புறக்கணித்து,
ஆசையாய் என்னென்னவோ வாங்கினேன்...
பத்திரமா வந்திருப்பா என்ற அம்மாவுக்கும்
தொலைபேசி ஒலித்தாலே ஓடி வரும் என் வீட்டு நாய் குட்டிக்கும்..


பிறந்தநாள்

பட்டாடை, அணிகலன்கள்..
பரிசு பொருட்களுடன் பகட்டான கூட்டம்..
இசை கச்சேரியுடன் அமளி துமளி...
பெருமையாய் வலம் வரும் பெற்றோர்..

அம்மா க்கு கொடுடா செல்லம்... என்றதும்
குழந்தை தேடியது வேலைக்காரியை !


Monday, August 20, 2012

திருமணம்

நீண்டதூர இடைவேளைக்கு இடையே வரும் நீர்தேக்கங்கள்தான் வாழ்வில் திருமணங்கள் 
ஆல்பா,  ஒமேகா என்ற கிரேக்க எழுத்துக்கள் கொண்டு தொடக்கம், முடிவு என்று எளிதில் அடையாளம் காட்டிவிட முடியாது 
அப்படியே காட்டமுற்படாலும் அது சிவனின் தலை மற்றும் பாதம் காண முற்பட்ட பிரம்மா, விஷ்ணுவின் கதைபோல ஆகிவிடும்

குழு(கூடி)ப்பணி செய்வோம்

ஒரு மர ம்  தோப்பாகாது
ஒரு முத்து மாலையகாது
ஒரு ஆடு மந்தையாகாது
ஒரு கை ஒசைஎழுப்பாது
என்ற உண்மைகளை உணர்ந்து என்றுமே
கூடிபணி செய்து கோடி நன்மைகளை பெறுவோம் நாம்

Saturday, August 18, 2012

சமீபத்தில் படித்த ஜெயமோகன் பக்கத்தில் இருந்து

புதுக்கவிதை எழுதப்போகும் இளைஞர்களுக்கு சில ஆலோசனைகள்.

முதலில் நன்றாக நிமிர்ந்து அமர்ந்துகொள்ளவும். கைகால்களை இலகுவாக்கிக் கொள்ளுங்கள். மூச்சை இழுத்துவிடுங்கள். நம்பிக்கை இருந்தால் குலதெய்வத்தை நினைக்கலாம். ஒன்றும் ஆகப்போவதில்லை. தைரியமாக இருங்கள். இதுவரை பல்லாயிரம் பேர் எழுதிவிட்டார்கள். இனியும் எழுதுவார்கள்.சிறந்த புதுக்கவிதை கொந்தளிப்புகளை உருவாக்கும்– அக்கவிதையில். அதைப்படிப்பவர்கள் உச்சகட்ட எதிவினைகளை உருவாக்குவார்கள், தங்கள் கவிதைகளில். ஆகவே கவிதை என்பது கவிதைக்காக மட்டுமே நிகழும் ஒருசெயல் என்பதை மீண்டும் நினைவுகூருங்கள்.

ஆரம்பிக்கும் முன்பாக உங்கள் கற்பனைக் குதிரையை தட்டி விடுங்கள். பின்நவீனத்துவக் கவிஞர் என்றால் பின்பக்கமாக. முற்போக்கு பின்நவீனத்துவம் என்றால் நீங்கள் பின்னால் திரும்பி அமரவேண்டும். உங்கள் புனைவுத்திறனின் உச்சம் வெளிப்படும் தருணம் ஆரம்ப கணத்திலேயே தேவையாகின்றது என்பதே கவிதையெழுத்தின் வசீகரமான ரகசியம். ஆம், உங்களுக்கு ஒரு பெயர் தேவை. புனைபெயர்! புனைபெயரில்லாத கவிஞன் மல்லிகைசூடாத விலைமகள் போல. கண்ணடித்தாலும் கண்டுகொள்ளாமல் கண்நோய்க்குக் கைமருத்துவம் சொல்வார்கள்.

புனைபெயரில் என்ன இருக்கிறது என்று எண்ணவேண்டாம். உங்கள் அனைத்துக் கவிதைகளுக்கும் அர்த்தம் அளிக்கும் முதல் புள்ளி புனைபெயர்தான் என்பது புதுக்கவிதையின் ஆரம்பப் பாடம்.

‘அம்மணக் குழந்தையின்
அர்ணாக்கொடியில்
ஆடுகிறது
மாலைக் காற்று’

என்ற கவிதையை ‘பிரபஞ்சாதீதன்’ எழுதியிருந்தால் என்ன பொருள், ‘செந்நிலவன்’ எழுதியிருந்தால் என்ன பொருள்வேறுபாடு, ‘சங்கிலிக்கருப்பு’ எழுதியிருந்தால் என்ன உட்பொருள் என யோசியுங்கள். முறையே உள்ளொளி,புரட்சி,தலித் கவிதைகளாக இது ஆகிவிடுகின்றதல்லவா? நீங்கள் யார் என்பதை உடனடியாக முடிவுசெய்யுங்கள்.

சுயபெயரிட்டுக் கொள்ள இரு தளங்கள் உள்ளன. ‘அண்டபேரண்டன்’ போன்ற பெயர்கள் ஓர் எல்லை. அப்படிப்பட்டபெயர்கள் அதிகம் காதில்விழுந்தால் ‘சுப்பம்பட்டி குப்புசாமி’ போல மறு எல்லைக்குப் போகலாம். பெயரைக் கேட்ட எவருமே ”யார்யா இவன்?” என்று அரைக்கணம் யோசிக்க வேண்டும். கவனியுங்கள் ஒரு கவிஞனின் பெயரை நினைவுகூரும்போது அதற்குப் பாடபேதம் உருவானால் மட்டுமே அது நல்லபெயர். உதாரணமாக முகுந்த் நாகராஜன் என்ற கவிஞரை ”…இந்த உயிர்மையில ஒரு கவிஞர்…பேரு…ஒருமாதிரி…முதுகு.. பாம்புன்னுகூட ஏதோ வரும்சார்…அந்தமாதிரி …ஒரு கவிதை எழுதியிருக்காரு பாருங்க…” என்று ஒரு வாசகர் நினைவுகூர முற்பட்டார்.

நீங்கள் எந்தவகைக் கவிஞர் என்பதை முதலில் வகுத்துக் கொள்ளுங்கள். இ.இ கவிஞர்,வா.இ கவிஞர்,சி.இ கவிஞர் என கவிஞர் மூவகைப் படுவர். இ.இ கவிஞர் இலவச இணைப்புகளில் கவிதை எழுதுகிறார்கள். ,வா.இ வார இதழ்களில். மூன்றாமவர் சிற்றிதழ்களில்.

காரைக்குடி கணேசன், ஆர்.அமிர்தகடேசன் வத்ராயிருப்பு போன்று பெயரிட்டு எழுதப்படும் கவிதைகள் கவிதைகள் அல்ல.அசின்பிரியா, ‘தமனா’கிருஷ்ணன் போன்ற பெயர்கள் போட்டுக் கொண்டு எழுதப்படும் இ.இ கவிதைகளில் இருந்தே தமிழ்ப்புதுக்கவிதை தொடங்குகிறது. காதல், சமூகக் கோபம், தன்னம்பிக்கை ஆகிய மூன்று தலைப்புகளுக்குள் பலநூறு விஷயங்கள் எழுதப்படலாம்.

கண்ணே
நீ லிப்ஸ்டிக் போடாதே
உனக்கு
‘செவ்வாய்’ தோஷம் என்பார்கள்!!!

என்பது போன்ற வரிகளில் முதலிரு தலைப்புகளையும் வெற்றிகரமாக நாம் இணைக்க முடியும். இ.இக்கள் அவற்றை ஒன்றுக்குமேற்பட்ட ஆச்சரியக்குறிகளுடனும் இண்டியன் இங்கில் வரையப்பட்ட தபால்தலையளவு நவீன ஓவியத்துடனும் [கண்கள் நடுவே மூக்குக்குப்பதில் பௌண்டன் பேனா!] முழு விலாசத்துடனும் வெளியிடும்போது உங்களுக்கு ‘மஞ்சுளாதாசன்’, ‘பருவம்’குமார், மிருதுளா கண்ணன்,செல்வக்குமரி தங்கரத்தினம் போன்றவர்களிடமிருந்து வாசகர் கடிதங்கள் வரும். அஞ்சக்கூடாது. அவர்களும் கவிஞர்களே. அனைவரும் ஆண்கள் என்பதை அறிகையில் மனம் உடைவதும் கூடாது.

வாஇ என்பது டூட்டோரியல் கல்லூரிகள் போல. அங்கே கவிஞர் ஆகவேண்டுமென்றால் நீங்கள் ஒன்று இஇ கவிதைகளிலிருந்து தேறி வந்திருக்கவேண்டும். அல்லது சிஇ கவிதைகளில் இருந்து தவறி வந்திருக்க வேண்டும். நேரடியாகப் பிரசுரம் பெற இயலாது. அங்கே காதல் மட்டுமே பாடுபொருள். கல்யாணமான பெண்கள் வேறு தலைப்பில் எழுதலாம்– கசந்த காதல் பற்றி. கவிதைகள் புகைப்படங்களுக்கு அடிக்குறிப்பாக ஆவது குறித்த கவலையை விட்டுவிடுங்கள். தலையில் டர்க்கிடவல் கட்டிக் குனிந்து கோலமிடும் பெண்கள், ரெட்டைச்சடை போட்டு தாவணி உடுத்து பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் கொண்டுசெல்லும் பெண்கள் என பலவிதமான பெண்கள் உங்கள் கவிதைகளைக் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

‘இரட்டைச்சடை அசைவில்
தார்க்குச்சி தட்டும் வண்டிக்காளைகள் போல
ஒற்றையடிப்பாதையில் விரையும் என் பாலியம்’

போன்று காமம் கலந்த இறந்தகாலஏக்கங்களுக்கு இக்கவிதைகளில் மைய இடமுண்டு. காதலைச் சொல்வது, சொல்லமுடியாமல் போவது, காதல் மறுக்கப்படுவது, ஏற்கப்படுவது, இழந்தகாதல் நினைவுகூரப்படுவது எனப் பல தளங்கள் இருந்தாலும் பழைய காதலியை முப்பதுவருடம் கழித்து சந்தித்தபோது அவள் செயற்கைப்பல் கட்டியிருந்த விஷயத்தைக் கவனித்து அதைக் கவிதையாக்கிய கெ.ஸ்ரீனிவாசநரசிம்மன் என்ற ஆழ்வார்பேட்டைக்காரர் வார இதழ்களால் அவரது வீட்டுக்கே ஆளனுப்பி மிரட்டப்பட்டார் என்ற தகவலையும் நினைவில் வையுங்கள்.

சிஇ கவிதைகளை நீங்கள் எளிதில் எழுதிவிடமுடியாது. முதலில் சிற்றிதழ்களை ஆறுமாதம் கூர்ந்து நோக்குங்கள். அப்போது கவிதைகளின் ஒரு பொதுவான சித்திரம் உங்களுக்கு பிடிகிடைக்கும். சிற்றிதழ்களையே பொதுவாக இரண்டாகப்பிரிக்கலாம். வண்ண அட்டை இதழ்கள் , கோட்டோவிய இதழ்கள்.

இரண்டாம் வகை இதழ்கள் மனிதனா தவளையா என்று தெரிந்துகொள்ள முடியாத விசித்திர உடல்களை ஆதிமூலபாணி எழுத்துக்களுடன் அட்டையில் போட்டு காசாங்குப்பம், முனியமேடு போன்ற ஊர்களிலிருந்து ராஜாளிவேந்தன், சித்திரவதையன் போன்ற புனைபெயருள்ளவர்களால் மும்மாதமொருமுறை என்ற நம்பிக்கையில் எப்போதாவது வெளியாகும் இதழ்கள். ‘காசுள்ளபோதே [பகைவரை] தூற்றிக்கொள்’ என்ற பழமொழிக்கு ஏற்ப வெளியாகக் கூடியவை. அவற்றுக்கு நீங்கள் கவிதைகளை தபாலில் அனுப்பிவிட்டு உடனடியாக மறந்துவிடவேண்டும்.அனுப்பிக் கொண்டே இருந்தால் அவை எங்கோ எப்படியோ வெளிவந்துகொண்டே இருக்கும். ஆனால் இதனால் பெரும்பாலும் பயன் கிடையாது. இவை சந்திரமதி தாலிபோல யார்கண்களுக்கும் படாத வரம் கொண்டவை.

வண்ணஅட்டைச் சிற்றிதழ்களுக்கு வாசகர் கடிதத்துடன் கவிதை அனுப்புவது சிறந்த வழிமுறை. அதன் ஆசிரியரால் எழுதப்படும் கட்டுரைகளுக்குப் பாராட்டுடன் அனுப்புவது மேலும் சிறந்தது. அவ்வாசிரியர் தன் எதிரி இதழுக்கு சவால்விட்டு எழுதிய கட்டுரையைப் பாராட்டி எழுதுவது மேலும்மேலும் சிறந்தது. சாது ஆத்மாக்கள் ஆயுள் சந்தாவுடன் கவிதை அனுப்பலாம். ஒருசிற்றிதழில் கவிதை வெளிவந்தால் உடனே அதன் போட்டிச்சிற்றிதழுக்கு அனுப்புவது உடனடி பலனளிக்கிறது. பொதுவான வண்ணஅட்டைச் சிற்றிதழ்கள் இக்காலத்தில் தமிழ்ப்பெண்களைக் கவிஞர்களாக்கும் வேள்வியில் ஈடுபட்டிருப்பதனால் பெண்பெயரில் கவிதைகளை அனுப்பலாம். கவிதையில் ‘நீ என்னைப் புணரும்போது’ போன்ற வாக்கியங்கள் முக்கியம்.

சிற்றிதழ்க் கவிதைகளைப்பற்றிய ஒரு பொது வடிவநிர்ணயம் இன்றைய அவசியத்தேவை. தேர்ந்த திறனாய்வாளர்களால் உருவாக்கப்பட்ட அவ்விதிகளைக் கீழே அளிக்கிறோம். இவை கவிதை எழுதுவதற்கான பயிற்சியுமாகும்.

1 எழுவாய் பயனிலை கொண்ட வரிகள் எழுவதால் பயனில்லை. ” நான் நேற்று ஒரு மஞ்சள் பறவை சிறகடித்து நீல வானத்தில் பறந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன்” என்ற வரி கவிதை அல்ல. ‘ நீலவானத்தை ஒரு மஞ்சள் பறவை சிறகடித்துப் பறக்கப் பார்த்தபோது’ என அதை மாற்ற முடியுமா என்று பாருங்கள்.

2 வரிகள் ஒழுங்காக அமைந்திருப்பது நவீன கவிதை அல்ல. உடையுங்கள். கைக்குழந்தை தோசையைப் பிய்ப்பதுபோல நடுவே பிடித்து பிய்த்தெடுங்கள். ‘சிறகடித்து நீலவானத்தைப் பறந்த ஒரு பறவையின் மஞ்சளைப் பார்த்து ‘ கவிதைமாதிரி ஆகிவிட்டதல்லவா?

3 உடைந்த தனிச்சொற்களின் சேர்க்கையே கவிமொழியாகும். இதை உருவாக்க சிறந்த வழி அவ்வப்போது சில சொற்களை வெட்டி விடுவதே. ஒரு தமிழ்க் கவிஞர் படிக்கத்தெரியாத தன் எல்கேஜி குழந்தையிடம் கொடுத்து ‘உனக்குப் பிடிக்காத வார்த்தையை வெட்டு பாப்பா” என்று சொல்லி கவிதைகளை உருவாக்குகிறார். கிளிகளையும் பயன்படுத்தலாம் ‘சிறகடித்து ஒரு வானநீலப் பறவை மஞ்சள்’ அற்புதமான ஒரு புதுக்கவிதையின் நுனியை இப்போது நீங்கள் பார்த்து விட்டீர்கள்!

4 கண்ணால் கண்ட ஒரு காட்சியை என்ன ஏது என்றெல்லாம் சிந்திக்கப் புகாமல் இம்மாதிரி கவிதையாகக் கலைத்துவைப்பது போதுமானது.

பயிற்சி: ”நான் நேற்று மஞ்சள் பறவை சிறகடித்து நீல வானத்தில் பறந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். அதன் சிறகுகள் அழகாக இருந்தன. அவற்றில் இருந்து ஒரு இறகு விழுந்து தரையில் கிடந்தது. எடுக்கப்போகும் முன் காற்றில் பறந்துபோய்விட்டது. எடுத்திருந்தால் ஆனந்தமாகக் காதுகுடைந்திருக்கலாம். இப்போது என் காதுக்குள் ஒரே நமைச்சல். அடுத்த பறவை எப்போது வரும்?’ இதைப் புதுக்கவிதையாக ஆக்குங்கள் பார்ப்போம்.

சிற்றிதழ்களிலும் பேரிதழ்களிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளை நீங்கள் எழுதிவிட்டபின்னர் ஒரு கவிஞன் என்ற தகுதி உங்களுக்கு வந்துவிட்டிருப்பதை அந்தரங்கமாக உணர்வீர்கள். இது பதின்பருவத்தில் உணர நேர்ந்த பல அந்தரங்கக் கண்டடைதல்களுக்கு நிகராகவே மனக்கிளர்ச்சி ஊட்டுவதென்பதை அறிவீர்கள். இதன் பின் நீங்கள் தொகுப்பு போடாமலிருக்க முடியாது. அரசு வேலையில் இருப்பீர்கள் என்றால் வைப்புநிதியில் கடன் பெறுங்கள். இல்லாவிட்டால் தொடக்க வேளாண் வங்கியில் [மனைவி] நகைக்கடன்.

ஒரு கவிதைத் தொகுதிக்கான இலக்கணங்கள் சில.

1. ஐம்பது கவிதைகளுக்குக் குறைவிலாதிருக்க வேண்டும். குறைந்தால் நவீன கோட்டோவியங்களைப் போடலாம்.

2. வண்ண அட்டையில் நவீன வண்ணஓவியங்கள் தேவை. ஆதிமூலம் வரைவது தொல்மரபு. மருது, சந்தானம் பின் மரபு. இணைய இறக்கமே இந்நாள் வழக்கம்.

3 கவிதைத்தொகுதிக்கான தலைப்புகள் நான்கு வகை. அவையாவன.

அ] பன்மைப்பெயர்கள். உணர்ச்சிப்பூக்கள், ஏறாத குன்றுகள், நிலவுமழைகள் போலப் பன்மையில் சூட்டப்படும் பெயர்கள். இவை அதிகமும் உருவகங்கள். இவை பொதுவாக இ.இ கவிதைகளுக்கு உரியவை.

ஆ] கடிநாக்குப் பெயர்கள். வாசகனின் நாவைப் பல் கடிக்கும் வாய்ப்புள்ள பெயர்கள் இவை. இதில் இரண்டுவகை. சுரோணிததளம், அட்சரலட்சியம் போல சம்ஸ்கிருதப் பெயர்கள். நிலையிலியலை, பிரதியழிந்தசுவடி போல தமிழ்ச் சொற்கள்

இ] முன்னது இரண்டிலிருந்தும் முற்றாக வேறுபடும் நோக்கம் கொண்ட தலைப்புகள். ‘சைக்கிள்’ ‘சின்னமைத்துனி’ போல. ஆனால் இத்தகைய தலைப்புகளுடன் கொடுக்கப்படும் படங்களில் கவனம் தேவை. சைக்கிள், இளம்பெண் படங்கள் அளிக்கப்பட்டால் முறையே சுயபராமரிப்பு அல்லது பலான நூல் என்று மயங்கி வாசகர் வாங்கி ஏமாறக்கூடும். முறையே நெருக்கக் காட்சியில் தொப்புள், உரித்துத் தொங்கப்பட்ட மாட்டுத்தொடை போன்ற படங்கள் இருப்பது இது கவிதைநூல் என்ற எண்ணத்தை உருவாக்கும்

ஈ] கிராமத்துத் தலைப்புகள். ”மாமோய், கஞ்சி கொண்டாந்திருக்கேன்!” ”கம்மங்கூழ்” போன்ற தலைப்புகள். இங்கும் கவனிக்க வேண்டியதொன்றுண்டு. இத்தகைய நூல்களின் அட்டை அதிநவீன முறையில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல் குஜிலி இலக்கியம் என்று வாசகர் மயங்குவர்

4.கவிதைகளைப் பெயர் போட்டோ போடாமலோ அச்சிடலாம். கவிதைக்கு மேலேயோ அடியிலோ வெற்றிடம் விடலாம். பதிலுக்கு விடலாகாது. வெள்ளைத்தாள் என்பது வரிகளைக் கவிதையாக ஆக்கும் தன்மை கொண்டது. முழுத்தாளின் கீழ் நுனியில் ‘காகம் கறந்து போயிற்று /காவென்று’ என்று ஒரு வரி மட்டும் இருந்தால் அது கவிதையாக ஆகும் விந்தை சிந்தைக்கு இன்பமளிப்பது

5. பின்னட்டையில் இருவகைக் குறிப்புகள் இருக்கலாம் என ஆய்வறிஞர் வகுத்துள்ளார்கள். ”தன்னிலையழிந்த கீழைமனத்தின் இன்னுமுணரப்படாத மெய்ப்பாடுகளில் உறங்கும் தொன்மங்களிலும் வாழ்க்கைநுண்மைகளிலும் அழியாது வாழ்ந்துகொண்டிருக்கும் ஓராயிரம் புராதனச் சொற்களின் வழியாகப் பீறிட்டெழும் கனவுகளில் இருந்து வழியும் குருதியும் சுக்கிலமும் பற்பல நிலவெளிகளின் வழியாக அருவிபோல ஒலித்து ஓடிக்கொண்டிருக்கும்போது நாம் அறியும் மௌனத்தைப்பேசுபவை இக்கவிதைகள்’ என ஏதாவது மூத்த எழுத்தாளர் அல்லது கவிஞரிடமிருந்து சொற்களை வாங்கிப் போடலாம். அற்றகைக்கு நாமே இவ்வாறு சொற்றொகை எழுதலும் ஆகும்

அல்லது ஒரு கவிதைவரியை மட்டும் எடுத்துக் கொடுக்கலாம்

‘நினைவின் காட்டுப்பாதை
கரிய குதிரை
நான் அலையும்போது
யாரின் குரல்?’

போதும். இது கவிதைத்தொகை என்ற இறும்பூது வாசகர்களுக்கு ஏற்படுதல் திண்ணம். பொதுவாகக் கவிதைத்தொகுதிகளின் பின்னட்டைக்குறிப்பென்பது வேறுநூலென எண்ணி வாங்கும் வாசகர்களின் வன்முறையில் இருந்து தப்பிக்கும் நோக்கம் கொண்டதென உணர்க.

ஒரு மாற்றத்துக்காக கவிஞரின் கையெழுத்திலேயே கவிதையை வெளியிடலாம்.

‘எதிரே போன பெண்ணின் [ பசுவின்]
நடை[இடை] அசைவில் பறக்கும்[ ஆடும்]
வண்ணத்துப்பூச்சி [பட்டாம்பூச்சி]
முந்தானை [வால்]சிறகடிப்பு”

என்று ஒரு வரி பின்னட்டையில் உரிய அடித்தல்களுடன் இருந்தால் கவிஞன் சிந்தனைப் பழக்கமுள்ளவன் என்பதற்கு உறுதியான சான்றாக ஆகிறது.

6. உள்ளே கவிஞனின் முன்னுரை அவசியம். அது சலிப்பின் குரலில் அமைந்திருத்தல் வேண்டும். ‘இருப்பின் துயரவெளிகளில் அலையும்போது மடியில் கட்டப்பட்டிருக்கும் பொரிகடலை எனக்குக் கவிதை’ போன்ற சில சொற்றொடர்கள்

7. மூத்த கவிஞர் ஒருவரின் முன்னுரையும் நல்லதே. ஆனால் அவர் ‘இனிமேலாவது ஒழுங்கா எழுதுடா மசிரே’ என்ற பொருளில் ”…அண்டபேரண்டனிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்’ என்று எழுதிவிடலாகாது.

கவிதைநூல்களைக் கவிஞனே அச்சிடுவது பழைய வழக்கம். பதிப்பகத்தாருக்குப் பணம் கொடுத்து வெளியிடுதல் புது வழக்கம். நாமே அச்சிடும்போது அன்பளிப்பாக அளித்த எண்பது பிரதிகள், மதிப்புரைக்கனுப்பிய இருபது பிரதிகள் தவிர மீதி எண்ணூற்றித் தொண்ணூற்றியெட்டை என்ன செய்வதென்று சிக்கல் ஏற்பட்டு மனைவியால் தினமும் ‘சனியன்பிடிச்ச பொஸ்தகங்கள் .இத எங்கிணயாம் கொண்டு போறேளா இல்ல வெந்நீரடுப்பில செருகவா?’ என்று வசைபாடப்படும். பதிப்பகத்தார் எனில் அவர்கள் நமக்களிக்கும் நூறு பிரதிகளுக்கு மேலாக ஐந்து பிரதிகள் மட்டுமே அச்சிட்டுப் புத்தகக் கண்காட்சிக்கு மட்டும் வைப்பார்கள் என்பதனால் அப்பிரச்சினை இல்லை. நம் நூல் உலகெலாம் வாசிக்கப்படுகிறதென்ற இன்பமும் நமக்குண்டு.

மதிப்புரைகள் பொதுவாக வருவதில்லை என்பதனால் பிரச்சினை இல்லை. கவிஞர் தன் கவிநண்பர்களுக்கு உரியமுறையில் கப்பம் கட்டியிருந்தால் மதிப்புரைகள் வரும். மதிப்புரைகள் என்பவை சொற்களே. கவிதைமதிப்புரைகள் என்பவை கலைந்த சொற்கள்.கவிதை என்பது பறவையடைந்த மரம் மீது வீசப்பட்ட கல் அல்லவா? ஆகவே ”மொழியின் நுண்காடுகளில் அலையும் சொற்களின் பிரதிமைகளின் பேச்சுமொழி அண்டபேரண்டனின் கவிதைகளின் பிரதித்தன்மையிலிருந்து கமழ்கிறது…” என்பது போன்ற வரிகளுடன் அவை சிற்றிதழ்களில் வெளிவரலாம்.

புதுக்கவிதை எழுதுவதனால் என்ன லாபம் என்ற வினா எப்போதாவது வந்து உங்களை மதுக்கடை நோக்கி உந்தக்கூடும். புதுக்கவிதை எழுதுபவனுக்குப் பணமோ புகழோ கிடைப்பதில்லையாயினும் தமிழ்மக்களின் கவிதையுணர்வைக் குறைசொல்லவும் தமிழ்க் கவிதையின் தரவீழ்ச்சியைப்பற்றி வருந்தவும் உரிமை கிடைக்கிறது, இது வாழ்நாள் முழுக்கச் செல்லுபடியாகக் கூடியதுமாகும். ஆகவே எழுதுக கவிதை!

பிகு

பயிற்சிக்காக நீங்கள் எழுதிய கவிதை கீழே காணும் கவிதையின் எழுபது விழுக்காட்டை அடைந்திருந்தால் நீங்கள் கவிதைத்தேர்வில் வென்றிருக்கிறீர்கள் என்று பொருள். வாழ்த்துக்கள்

சிறகடித்து ஒரு வானநீலப்
பறவை மஞ்சள்
சிறகுகள் உதிர் இறகு
காற்றில்
பறக்க
எடுத்திருந்தால்
என் ஆனந்தக் காது.
நமைச்சல்
எப்போது
அடுத்த பறவை?

Thursday, August 16, 2012

மனதின் ரசனை

மெல்லிய இசை செவிகளுக்கு விருந்து !
பசுமையான காட்சி கண்களுக்கு விருந்து !
நறுமணம் நாசிக்கு விருந்து !
அறுசுவை உணவு நாவிற்கு விருந்து !
பிறந்த குழந்தையின் ஸ்பரிசம் விருந்து !

புலன்கள்,

 உணர்வுகளை மனதுக்கு
      பட்டுவாடா செய்யும் பணியாளர்கள் !

மனதால் ரசிக்கப்படும் போது இந்த
      உணர்வுகள் மோட்சம் அடைகின்றன !

Wednesday, August 15, 2012

பூட்டு

ஒரு நம்பிக்கை,

போலி சாவி செய்து கொடுத்தவனுக்கு  முகவரி தெரியாதென்று !
யாரும் வலுக்கட்டாயமாகத் திறக்க முற்பட மாட்டார்கள் என்று !

உடமைகளை மட்டும் அல்ல மனதையும் !

அங்கீகாரம்

ஓவியக்  கண்காட்சி,

காத்திருந்து பல லட்சங்கள் கொடுத்து கணவன் வாங்கி வந்தான்
ஒரு அற்புதமான ஓவியம் !

அது பழைய புத்தகங்களுடன் பயணித்து வந்த, 'தன் மனைவியின் 
கை வண்ணம்' என்று தெரியாமல் !

அவளுக்குப் பேசத் தெரியும் என்பதே  அறியாத கணவனிடம்
அந்த பேதைப்பெண் சொல்லியிருக்க வாய்ப்பில்லை !

நாகரிகம்


அம்மியும் ஆட்டுரலும் புராதன பொருட்களான பின்
ஜிம்மில் அரிசியே இல்லாமல் மாவரைக்கிறாள் அம்மா, 
       அழகாய் இருக்க !

  மகளுக்கு சாப்பாடு பீட்சா !
  அடுத்த உறுப்பினர் தயார் !




    

நட்சத்திரங்கள்

சின்ன சின்ன சூரியன்கள்- கண்
சிமிட்டி சிமிட்டி சிரிக்கின்றன
பூமகளின் வான் சேலையில்
ஜிமிக்கி ஜிமிக்கியாய் ஜொலிக்கின்றன

ஆதவனின் அருந்தவ புதல்வி
அழகில் அவள் முதல்வி
அவளை மணக்க வந்தீரோ
நட்சத்திர மாப்பிள்ளைகாள்!!

Tuesday, August 14, 2012

உணர்வுகள்

நானும் நடக்கின்றேன் தனிமையிலே
இந்த நிலவு என்னை தொடர்வதையும்
அந்த பரிதி என்னை தொடர்வதையும்
என் தாயின் உணர்வுகள் என்னை தொடர்வதையும்
நானே என்னை தொடர்வதையும் மறந்து உணர மறுத்து
நானும் நடக்கின்றேன் தனிமையிலே

என் சிநேகிதி !

குட்டி குட்டி கதைகள் பேச...
என் முடிவுகளை ஆலோசிக்க...
முக மாறுதலுக்கு விளக்கம் கேட்க....
எனக்கு இருக்கும் ஒரே சிநேகிதி...

இரவில் நான் தனிமையில் செல்வேன் என்று
என் கூடவே வரும் அழகுப் பதுமை ...

இன்று அவளும் கோபித்து கொண்டாள் - அமாவாசை !

ஏழையின் சிரிப்பில் !

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் !
இரண்டுமே அரிதாய் இருப்பதலா
அல்லது
எங்கும் ஏழைகள் நீக்கமற நிறைந்திருப்பதலா ?

இறைவா உனக்கு நன்றி !


இந்த ரம்யமான உலகத்தில் எனக்கு ஒரு இடம் அளித்ததற்கு !

அதிகாலை குயிலின் பூபாளம் !
அந்தி நேர தென்றல் காற்று !
மகரந்தமாய் மணம் வீசும் மலர்கள் !
அன்னமென நடை பயிலும் நீரோடை !

மனதை வருடும் நிசப்தம் !
மெலிதாய் கேட்கும் மரங்களின் சல சலப்பு !
சோர்வில்லாமல் தாலாட்டும் அலைகள் !
வானமே எல்லையென சிறகடிக்கும் பறவைகள் !

சுறு சுறுப்பைச் சொல்லி கொடுக்கும் எறும்புகள் !
போராடக் கற்று கொடுக்கும் பூக்கள் !
விடா முயற்சியை வலியுறுத்தும் சிலந்தி !
உரிமை கோர கற்றுக்கொடுக்கும் விதைகள் !

எல்லாம் உனக்குத்தான் என்று சொல்லாமல் சொல்கிறது
ஏகாந்தமாய் விரிந்து கிடக்கும் வானம் !
ஒரு ரசிகனாய் எனக்கும் ஒரு இடம் அளித்ததற்கு நன்றி !
ஒரு நாள் வானம் வசப்படும் !

Saturday, August 11, 2012

முதுமை

 மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி
முதியோர் இல்லத்தில் உணவு !
தந்தை மகனுக்கு ஆற்றும் உதவி
ரேசன் கார்டில் அரிசியும் சர்க்கரையும் !

Tuesday, August 7, 2012

அதிகாலைப் பொழுது ....

இளஞ்சிவப்புக் கதிரவன் உதயமும்
கருஞ்சிவப்பு சேவலின் கூவலும்
நிறைந்த வெகுசன மக்களின்
விடியற்காலை வேளை.

பாதி உறக்கத்துடன்
படிக்கும் மாணவர்கள்.

நாட்டுச் சேதி தெரிய
நாளிதழுடன் காதல் நடத்தும்
நாற்பதைத் தாண்டியோர்.

நடைபயிலும் சிறு குழந்தைகள்
நடைப் பயிற்சி செய்யும் வயதானோர்.

பண்டைய பாடலை 
தொண்டை கிழிய இசைக்கும்
அண்டை வீட்டு வானொலி.

கோலமிடும் தாவணிப் பெண்கள்
குழாயடிச் சண்டையிடும் கோவக்காரப்  பெண்கள்
குத்து விளக்கு ஏற்றும் குடும்பத் தலைவிகள்.

பாலூட்ட குழந்தைக்குப்
பாட்டுச் சொல்லித் தாலாட்டும்
தாத்தா பாட்டி.

வேலைக்குச் செல்லும்
அலுவலகப் பணியாளர்கள்
வேலை வாய்ப்பு அலுவலகத்தின்
முன் காத்திருக்கும் பட்டதாரிகள்.

திருப்பதி தரிசனத்தை மிஞ்சும்
வரிசையில்அமெரிக்கத் தூதரகத்தின்
முன் காத்திருக்கும்
 
விசா விரும்பிகள்.

குளிச்சியா , காப்பி குடிச்சியா என
தினம் மறவாது குறுஞ்செய்தி
பரிமாறும் காதலர்கள் என

அனைவரும் தத்தம்
பணியில் பரபரப்புடன் காணப்படும்
அதிகாலைப் பொழுது !

சூரிய ஒளி சன்னல் வழியே
கன்னத்தில் பட
அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா என
அலுத்துக்கொண்டே போர்வையை
இழுத்து முகத்தோடு மூடி
உறங்கிக் கொண்டு
இருக்கும் நான் !!!

                                                                                         

                                                                              - இராஜேஷ் குமார்